Wednesday 22 July 2020

குழந்தைகள் பாடசாலை செல்ல ஏன் மறுக்கின்றனர்?



குழந்தைகளின் பாடசாலை செல்வதற்கான ஆயத்த நிலையில், உடலியல் மற்றும் உளவியல் காரணங்கள் பங்களிப்பு செலுத்துகின்றன என்பது உளவியலாளர்களின் கருத்தாகும்.

குழந்தைகள் பாடசாலை செல்ல மறுப்பதற்கான காரணங்கள்
  
  •  Separation anxiety எனப்படும் பெற்றோரை பிரிந்து இருப்பதற்கான பயம் பிரதான காரணமாக கருதப்படும். வீட்டில் ஒரு குழந்தையாக வளரும் குழந்தைகளிடத்தில் இது அதிகமாக காணப்படும். வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் குழந்தைகளிடத்தில் சிறுவயதிலிருந்து பெற்றோரை பிரிந்து பழகி இருப்பதனால் இதன் தாக்கம் குறைவாக இருக்கும்
  •  குழந்தையின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் குழந்தையுடன் ஆசிரியர் கண்டிப்பாக நடந்து கொள்ளும் போது குழந்தை பாடசாலை செல்ல மறுக்கலாம்.
  • குழந்தைக்கு இரவு தூக்கம் குறைவாக இருத்தல் மற்றும் காலை உணவு சாப்பிடாமல் செல்லல். இதனால் பாடசாலை செயற்பாடுகளில் ஒருமுகப்படுத்த முடியாமையினால் குழந்தை பாடசாலை செல்ல மறுக்கலாம்.
  • நீண்ட தூரம் பாடசாலைக்காக பயணித்தலும் பயத்தை அதிகரிக்கும்.
  • குழந்தைக்கு கற்றல் சம்பந்தமான பிரச்சினைகள் இருந்தல்.
இப்படியான பிரச்சினைகளை எதிர்நோக்கும் சில குழந்தைகள், தான் பாடசாலை செல்ல மாட்டேன் என நேரடியாகச் சொல்வார்கள். இன்னும் சிலர் avoidance behaviors மூலம் அதனை வெளிக்காட்டுவார்கள்.

உதாரணமாக வேண்டுமென்றே இரவில் நேரம் சென்று தூங்கச்சென்று காலையில் நேரம் சென்று எழும்புதல். கை, கால், வயிறு வலிக்குது எனக் கூறல். இன்னும் கடுமையாகும் போது வாந்தி எடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர். குழந்தைக்கு மனப் பயம் அதிகமாக உள்ள போது, குழந்தை உண்மையாகவே இத்தகைய நோய் அறிகுறிகளை உணரலாம்.



பாடசாலை செல்ல மறுக்கும் குழந்தைகளை எவ்வாறு கையாளலாம்?
  • குழந்தையின் அன்றாட பழக்க வழக்கங்களில் மாற்றங்களை கொண்டு வருதல்.


குழந்தைகளுக்கு 10-12 மணித்தியாலங்கள் இரவு தூக்கம் அவசியம் என்பது அநேக உளவியலாளர்களின் கருத்தாகும். இது மன அழுத்தத்திற்கான ஹார்மோன்களின் அளவை மூளையில் குறைத்து காலையில் முணங்கிக் கொண்டு அழுதுக்கொண்டு எழும்புவதை தடுக்கும். மேலும் காலையில் குழந்தை மனப்பயத்துடன் காணப்பட்டாலும் நன்றாக தூங்கி அமைதியாக உள்ள குழந்தையிடம் கலந்துரையாடல் மூலம் அதனை மாற்றி அமைக்கலாம்.

அமைதியான முறையில் காலை உணவை வழங்குதல். 

இதுவும் நேரத்துடன் எழும்பும் குழந்தையிடமே சாத்தியமாகின்றது. அதேவேளை அதிகளவு உணவை ஒரேநேரத்தில் வழங்கும் போதும் குழந்தை அதை உண்பதில் சிரமத்தை எதிர்நோக்கும். உதாரணமாக பாலையும் மற்றைய காலை ஆகாரத்தையும் ஒரேநேரத்தில் வழங்குதலை குறிப்பிடலாம். இதற்கு மாறாக குறைந்த அளவில் சத்துள்ள ஆகாரத்தை வழங்கலாம். 
  •  தினமும் பாடசாலை அனுப்புதல்.

குழந்தை பாடசாலை செல்ல மறுக்கின்றது என்பதற்காக அடிக்கடி விடுமுறை வழங்கும் போது அவர்களிடம் பாடசாலை செல்வதற்கான coping skill விருத்தி அடைய தாமதமடையலாம். எனவே குழந்தை பாடசாலை செல்ல மாட்டேன் என அடம்பிடிக்கும் போது அவர்களை அமைதிபடுத்தி தினமும் அனுப்புதல் அவசியமாகும். பொதுவாக குழந்தைகள் பாடசாலை செல்வதற்கான coping skillயை விருத்தி செய்ய 2-3 மாதங்கள் வரை செல்லலாம். ஆகவே அதுவரை பொறுமையாக இருத்தல் அவசியமாகும்.
  • ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் சிறந்த உறவை பேணுதல்.

பெற்றோர்கள் குழந்தை பாடசாலை செல்ல மறுக்கும் விடயத்தை ஆசிரியரிடம் சுமுகமாக கலந்துரையாடுதல். பாடசாலைகளில் பயிற்சி கொப்பிகளை சேகரித்தல் போன்ற  சின்ன சின்ன பொறுப்புக்களை குழந்தைகளுக்கு  வழங்குதல். இதன் மூலம் நாம் பாடசாலை சென்று ஏதாவது செய்ய முடியும் என்ற உணர்வை ஏற்படுத்துவதோடு பாடசாலை பற்றிய பயத்தை போக்கும்.

கற்றல் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் பிரச்சினைகளை இணங்காணும் போது அவற்றை பெற்றோர்களுடன் கலந்துரையாடுவதுடன் அதற்கான தீர்வை பெற இருபாலாரும் ஒருவருக்கொருவர் உதவுதல்.
  • பிரிவினால் ஏற்படும் பயத்தை குறைத்தல்

''நீங்கள் பாடசாலை சென்று வாருங்கள் நாம் இந்த வேலைகளை செய்வோம்'' என்றவாறு கூறும்போது அவர்களுக்கு பெற்றோர்கள் நாம் பாடசாலை சென்று வரும்போது வீட்டில் இருப்பார்கள் என்ற மனநிலையை ஏற்படுத்தும். இது separation anxietyஆல் ஏற்படும் பயத்தை குழந்தைகளுக்கு இல்லாமலாக்குகின்றது.

மேலும் டசாலை செல்லாவிட்டால் நான் அதிபரிடம் சொல்லுவேன் போன்ற பயமுறுத்தல்களை செய்ய வேண்டாம். இதுவும் குழந்தைக்கு பாடசாலை பற்றிய பயத்தை அதிகரிக்கும்.
  • குழந்தைகளிடம் காணப்படும் மன அழுத்தத்தை போக்குவதற்கு நன்றாக விளையாட அனுமதித்தல்.

www.drsanoosiya.blogspot.com.

2020.07.22







Thursday 9 July 2020

குழந்தைகள் எப்போது முன்பள்ளி(Preschool) கற்றலுக்கு தயாராகின்றனர்?



சிறுவர்களை பொறுத்தவரையில் குழந்தை பருவத்திலிருந்து முன்பள்ளி பருவத்தை நோக்கிய பயணம் என்பது வாழ்வின் பிரதான மைல்கல்லாக கருதப்படுகின்றது. இந்த பருவத்தில் தனது குழந்தைகளுக்கு எல்லாவகையான கல்வித்தகைமைகளையும் வழங்க வேண்டும் என்பதில் பெற்றோர்களின் ஆர்வம் அளப்பெரியது. 

அதேநேரத்தில் முன்பள்ளி பாடசாலைகள் குழந்தைகளை எல்லா வயதிலும் உள்வாங்குவதனால் பெற்றோர்கள் மத்தியில் எந்த வயதில் தனது குழந்தைகளை முன்பள்ளிற்கு அனுப்ப வேண்டும் என்பதில் குழப்பநிலை காணப்படுகின்றது. வயது என்பது ஒரு குழந்தையின் கற்றலின் ஆயத்தநிலையை தீர்மானிப்பதில்லை என்பது அநேக உளவியலாளர்களின் கருத்தாகும். மாறாக குழந்தைகள் முன்பள்ளிப்பாடசாலைக்கு செல்வதற்கு முன்னால் சில திறன்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் அவர்களது முன்பள்ளி கற்றல் நடவடிக்கைகள் சிறப்பாக அமையும் என்பது அவர்களது கருத்தாகும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்தவுடன் மாவு ஊற்ற கூடாது. மாறாக அது சரியான பதத்தில் சூடான போது மாவு ஊற்றினால் அது தோசையாக மாறும். அதே போல குழந்தைகள் உளவியல் மற்றும் உடலியல் ரீதியான அடிப்படையான திறன்களை பெற்றதன் பிற்பாடு முன்பள்ளிகளுக்கு செல்லும்போது அவர்களது கற்றல் நடவடிக்கைகளை சிறந்த முறையில் ஆரம்பிக்கலாம்.

குழந்தைகள் பிறந்தது முதல் வீட்டிலுள்ள பெரியவர்கள் அனைவரது கவனமும் அவர்கள் மீதே காணப்படுகின்றது. அவர்களை சுற்றி உள்ளவர்கள் அவர்களுடன் விளையாடுவதும் கொஞ்சி பேசுவதும் தொடர்ச்சியாக காணப்படும். குழந்தைகள் முன்பள்ளிப்பருவத்தை அடைந்தவுடன் அவர்களை திடீரென பாடசாலைக்கு அனுப்பும்போது அந்த பெரியவர்களின் கவனிப்பு இல்லாமலாகின்றது. ஒரு ஆசிரியரின் கவனிப்பு வகுப்பிலுள்ள 10-20 குழந்தைகளுக்கு பிரிக்கப் படுகின்றது. இந்த கவன இழப்பிற்கு தயாராக்க கூடிய மனப்பலத்தை வளர்த்தெடுக்க வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பாகும்.

முன்பள்ளி செல்வதற்கு முன்னால் குழந்தைகளிடம் மூன்று வகையான உளவியல் திறன்களை  வளர்த்தெடுப்பதன் மூலம் இது சாத்தியமாகின்றது என்பது குழந்தை வளர்ப்பு நிபுணத்துவர் Dr Debmita Dutta அவர்களின் கருத்தாகும்.

குழந்தைகள் அழைத்தவுடன் எமது கவனம் அவர்கள் மீது திரும்பாது என்பதனை புரிந்துக் கொள்ள வேண்டும்.

அதாவது குழந்தைகள் ஒரு விடயத்தை நாடி உங்களை அழைக்கும் போது ''கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் குறிப்பிட்ட வேலையை முடித்துக்கொண்டு விரைவில் வருகின்றேன்'' போன்ற வார்த்தைகளை சொல்லிப்பழகுதல் வேண்டும்.
மாறாக நாம் குழந்தைகள் அழைக்கும் போதெல்லாம் எமது வேலைகளை விட்டுவிட்டு உடனே எமது கவனத்தை அவர்கள் மீது திருப்பும்போது இதனை ஆசிரியரிடம் எதிர்பார்க்கும் போது அது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை வழங்கும்.

குழந்தைகள் தமது வேலைகளை செய்யும்போது எப்போதும் மற்றவர்களது கவனம் அவர்கள் மீது இருக்காது என்பதனைபுரிந்துக்கொள்ள வேண்டும்

உதாரணமாக குழந்தைகள் விளையாடும் போதோ படங்களை வரையும் போதோ எமது கவனத்தை தொடர்ச்சியாக அவர்கள் மீது வழங்கும் போது பாடசாலையில் ஆசிரியரிடமும் இதனையே எதிர்பார்ப்பார்கள். இது வகுப்பறை நடவடிக்கைகளை குழப்புவதுடன் குழந்தை மீது தப்பபிப்பிராயம் ஏற்பட ஏதுவாகும்.

எல்லோரும் சிலநேரங்களில் முதல் வாய்ப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் அதேவேளை இறுதி வாய்ப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உண்மையை குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும்.


இது அவர்கள் பொதுவாக  விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடும்போது தனக்கான வாய்ப்பு வழங்கப்படும் வரை காத்திருக்க வழிவகுக்கும்.



உடலியல் ரீதியான பின்வரும் பிரதான திறன்களையும் குழந்தைகளிடம் வளர்த்தெடுத்தல் அவசியமாகும்.
  • சுயமாக  மலசலம் கழிப்பதற்கான உணர்வை பெற்றிருப்பதுடன் அதனை புது நபரிடம் சொல்லக்கூடிய திறனை குழந்தை பெற்றிருத்தல் வேண்டும்- Potti training

  • சுயமாக உணவை கைகளால் எடுத்து சாப்பிட பயிற்றுவிக்கப்பட்டிருத்தல்  வேண்டும்- Teddy bear picnics


  • Shoes சுயமாக போட்டு கழற்றுதல்பொத்தான்  கழற்றுதல், Tiffin box மூடி திறத்தல் போன்ற திறன்களை குழந்தை பெற்றிருத்தல் வேண்டும். 


  • குழந்தைகள் பெற்றோர்களை நீண்ட நேரம் பிரிந்து இருப்பதனால் ஏற்படும் பயத்தை ஓரளவு கையாள்வதற்கான தைரியம் வழங்கப் பட்டிருத்தல் வேண்டும்- Parental anxiety

  • நல்ல மற்றும் கெட்ட தொடுகை சம்பந்தமான அடிப்படை பாலியல் விபரங்கள் ஊட்டப்படல் வேண்டும்- Bad touch and good touch

  • தனது பெயரை அழைக்கும் போது அதனை இணங்காணக்கூடியவர்களாக இருத்தல் வேண்டும்


இதனால்தான் குழந்தை உளவியலாளர் Maria Montessory ''குழந்தைகள் கற்றலில் சிறந்து விளங்க வேண்டுமென்றால் சுயமாக இயங்குவதற்கான அடிப்படை திறன்கள் வளர்த்தெடுக்கப் பட வேண்டும்'' என வலியுறுத்துகின்றார். மற்றவர்களிடம் தங்கிவாழும் குழந்தையால் கற்றல் நடவடிக்கைகளில் சிறந்து விளங்க முடியாது என்பது அவரது நம்பிக்கையாகும். குழந்தை மற்றவர்களில் தங்கி  இல்லாமல் சுயமாக இயங்கும்போது புதிய அனுபவங்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள கற்றுக் கொள்கின்றனர் . இத்தகையோர் கற்றல் நடவடிக்கைகளில் விரைவாக ஈடுபடுவர்.


மேலும் குழந்தை செல்லப் போகும் பாடசாலை மற்றும் ஆசிரியர் சம்பந்தமாக சுவாரஷ்யமாக அவர்களுடன் கலந்துரையாடல். மற்றும் அவர்களை கூட்டிச்சென்று கடையில் water bottle, bags வாங்கிக் கொடுத்தல் போன்றவை அவர்களுக்கு பாடசாலை சம்பந்தமான ஆர்வத்தை கூட்ட ஏதுவாக அமைகின்றது.

www.drsanoosiya.blogspot.com.
2020.07.09