Sunday 9 August 2020

HELICOPTER PARENTING

 

நீண்ட காலத்திற்கு பிறகு குழந்தைகள் கிடைத்தல், பிறந்ததிலிருந்து குழந்தைகள் நோய்க்கு உள்ளாக்குதல் அல்லது ஒரே ஒரு குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் தனது குழந்தைகள் விடயத்தில் அதிகம் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். அந்த குழந்தையின் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருப்பதனால் அவர்களை சுயமாக இயங்க  விடாமல் பல கட்டுப்பாடுகளை விதிப்பார்கள்.

இத்தகைய குழந்தை வளர்ப்பானது உளவியலில் helicopter parenting எனப்படும். அதாவது குழந்தை செய்யும் எல்லா விடயத்தையும் helicopter மேலே இருந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அதுபோல பெற்றோர்கள் கவனிப்பதை குறிக்கும். இத்தகைய பெற்றோர்கள் தனது குழந்தையை யாரும் எதுவும் சொல்லி விடக்கூடாது மற்றும் வெளியே போனால் விழுந்து விடுவார்கள், இந்த சாப்பாடு கொடுத்தால் ஒத்துக்கொள்ளாது, அவருடன் கதைக்கக் கூடாது என்றவாறு பல கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். மேலும் அடிப்படையான வீட்டு வேலைகளையும் குழந்தைகளை செய்ய விடாது தாமே செய்வார்கள்.

இதனால் குழந்தைகளின் வளர்ச்சியில் உளவியல் ரீதியாக ஏற்படும் பாதிப்பு என்ன?

இத்தகைய குழந்தைகளுக்கு தனது சூழலுடனான சுயமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் குறைவாக இருப்பதனால் மூளையில் நரம்பெண்களுடனான வளர்ச்சியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

மேலும் இத்தகைய குழந்தைகளுக்கு பல விதமான நபர்களுடன் இணைந்து செயற்படக்கூடிய வாய்ப்பு குறைவாக உள்ளதனால்  அவர்களது சமூக வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இன்று கூட்டுக் குடும்பங்களும்  அருகிக் கொண்டு செல்வதனால் வீட்டில் ஒரே குழந்தையாக மற்றவர்களுடன் இணங்கி வாழத்தெரியாமல் வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் சமூகத்தில் ஒன்றிணைந்து செயற்படும் ஆற்றலை இழப்பதோடு எதிர்மறையான பழக்கவழக்கங்களுக்குள் செல்லும்வாய்ப்பு அதிகமாகும்.

அடிப்படை வாழ்க்கை திறன்களை கற்றுக்கொள்ளாததனால் மற்றவர்களிடம் அதனை எப்போதும் எதிர்பார்ப்பார்கள்.

தாம் சுயமாக இயங்கும் போது  பெற்றோர்களுக்கு தன மீது நம்பிக்கை இல்லை என்ற உணர்வை குழந்தைகள் பெறுவதனால் தன்னம்பிக்கையையும் சுயமதிப்பையையும் இழக்கின்றனர்.

எமது குழந்தை வளர்ப்பில் இந்த பிரச்சினையை எவ்வாறு கையாளலாம்?

பட்டம் ஒன்றை பறக்கவிடும் போது அதன் கயிற்றை மிகவும் இறுக்கமாக பிடிக்கும் போது பட்டம் பறக்காது அதேநேரத்தில் எமது இறுக்கத்தை சற்று தளர்த்தும்போது அது சுதந்திரமாக வானத்தில் பறக்கின்றது. இவ்வகையான நுட்பத்தையே எமது குழந்தை வளர்ப்பிலும் கையாள வேண்டும் என்பது ஒரு உளவியலாளரின்  கருத்தாகும். பாதுகாப்பான சூழல் ஒன்றை உருவாக்கியதன் பிற்பாடு குழந்தைகளை சுதந்திரமாக விடலாம் என்பது அவரது கருத்தாகும்.

உதாரணமாக தேவையற்ற பொருட்களை குழந்தை பொறுக்கி சாப்பிட்டால் நோய் வந்துவிடும் என்ற பயத்தில் தரையில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதை விட தரையை நன்று சுத்தம் செய்து விட்டு பாதுகாப்பான சூழலில் குழந்தையை சுதந்திரமாக விளையாட விடுவதே சிறந்த குழந்தை வளர்ப்பாகும்.


www.drsanoosiya.blogspot.com.
2020.08.09