Saturday 4 January 2020

உங்கள் குழந்தைகளை அதிகமாக திட்டுகிறீர்களா?


பெற்றோர்களின் வாழ்க்கையில் தமது குழந்தைகளை ஏசுதல் என்பது இன்றியமையாத நிகழ்வாகும். நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால் உங்கள் குழந்தையை ஏசாமல் ஒரு நாளை கழிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். சில நேரங்களில் நாம் ஒரு நாளை எண்ணிப்பார்க்கும் போது அந்த நாள் முழுவதும் எமது குழந்தையை ஏசுவதிலேயே கழித்திருப்போம். அதே நேரத்தில் எவ்வளவு ஏசியும் பயனற்று போன நாட்களும் உண்டு.

இவை எல்லாம் பெற்றோர்கள் வாழ்க்கையில் சர்வசாதரணமான  விடயமாக இருந்தாலும் எமது ஏச்சுக்கள்  எமது பிள்ளைகளுக்கு இடையில் மதிப்பிழந்து காணப்படுவதற்கான காரணத்தை எப்போதாவது சிந்தித்ததுண்டா?

எமது ஏச்சுக்களில் பிழை உள்ளது என்பதனையும் பூரணத்துவம் இல்லை என்பதனையும் உணர்கிறீர்களா?

நாம் ஒரு குழந்தையை ஏசும்போது எதிர்பார்ப்பது அந்தக் குழந்தை குறிப்பிட்ட செயலை இனிமேல் செய்யக்கூடாது என்பதனையே. அவ்வாறு எதிர் பார்க்கும் நாம் வெறுமனே செய் செய்யாதே என்ற வார்த்தையை மாத்திரம் கூறி கட்டளையை பிறப்பிக்கின்றோம். நாம் இடும் கட்டளைக்கான காரணத்தையோ அதற்கான மாற்று வழிகளையோ பிள்ளைகளுடன் கலந்துரையாட மறுக்கின்றோம்.

எம்மிடம் ஒருவர் எதையாவது செய்யும் படி கட்டளையிட்டால் ஏன் செய்ய வேண்டும் என உரிமையுடன் கேட்கின்றோம் அல்லவா? அதே கேள்வியை உங்கள் குழந்தை கேட்கும்போது நீ எதிர்த்து பேசுகிறாய் என அவர்களை  கண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்?

ஆகவே உங்களின் ஏச்சுக்களின் மூலம் உங்கள் குழந்தைகளிடம் எதிர்பார்க்கும் நடத்தை மாற்றத்தை நீங்கள் காண  வேண்டும் என்றால், உங்கள் ஏச்சுக்கள் பூரணத்துவமாக இருத்தல் வேண்டும்.

பூரணத்துவமாக ஏசுதல் என்றால் என்ன?

இது மூன்று பகுதிகளை உள்ளடக்கியது.
  1.   கெட்ட பழக்கத்தை நிறுத்துவதற்கான கட்டளை.
  2. அப்பழக்கத்தை நிறுத்த வேண்டியதற்கான காரணம்.
  3. குறிப்பிட்ட கெட்ட பழக்கத்திற்கான மாற்று வழி முறை.





உதாரணமாக எமது குழந்தை, இன்னொரு குழந்தை வைத்திருக்கும் விளையாட்டு பொருளை கேட்டு அந்த குழந்தையை அடிக்கும் பொது,

  1. அந்தகுழந்தையை அடிக்கக் கூடாது என கட்டளை பிறப்பிக்கலாம்.
  2. அவ்வாறு அடிக்கும்போது அந்தக் குழந்தை காயப்படும் என்ற காரணத்தை கூறலாம்.
  3. அடிப்பதற்கு பதிலாக அவரிடம் பொருளை தருமாறு அழகிய முறையில் வினவினால் அவர் தருவார் என்ற மாற்று வழிமுறையை கூறலாம்.

இதன் மூலம் குழந்தைகள் ஒரு பிரச்சினை வரும்போது எவ்வாறு அணுகலாம் என்ற அனுபவக்  கல்வியை கற்றுக் கொள்கின்றது. இது போன்ற சந்தர்ப்பம் எதிர் காலத்தில் ஏற்படும் போது எமது உதவி இன்றி அதனை அணுக கற்றுக் கொள்கின்றது.


மாறாக ஏன்  அடித்தாய்? என்று ஒரு அடியை நாம் நமது குழந்தைக்கு திருப்பிக் கொடுக்கும் போதோ அல்லது இதற்கு மேல் இவ்வாறு அடிக்கக்கூடாது என கட்டளை பிறப்பிக்கும் போதோ,குழந்தை அதன் மூலம் எந்த ஒன்றையும் கற்றுக் கொள்ளப் போவதும் இல்லை.
இவ்வாறான சந்தர்ப்பத்தை குழந்தை திரும்பி எதிர்கொள்ளும் போது மீண்டும் அடிப்பதற்கான சத்தியகூறே அதிகம்.

ஆகவே குழந்தைகள் தவறு செய்யும் போது இவ்வாறான ஆரோக்கியமான தொடர்பாடல் திறனை வளர்ப்பதன் மூலம் சிறந்த  பிரஜைகளை உருவாக்குவோமாக.

www.drsanoosiya.blogspot.com

By ART OF PARENTING at 4th of January 2020


No comments:

Post a Comment