Wednesday 1 July 2020

குழந்தைகள் ஏன் பிடிவாதம் பிடிக்கின்றார்கள்?



தனக்கு சிறுவயதில் கிடைக்காத எல்லாம் தன் குழந்தைக்கு கிடைக்க வேண்டும் என்பது இன்றைய பெற்றோர்களின் ஆதங்கமாக உள்ளது. இதனால் சுதந்திரம் என்பது மிகவும் சாதாரணமாக குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றது.மிதமிஞ்சிய சுதந்திரத்தை குழந்தைக்கு வழங்கும் போது அதனை சரியாக புரிந்துகொள்ள முடியாத குழந்தைகள் அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த ஆரம்பிக்கின்றார்கள்.

ஆரம்பத்தில் குழந்தைகளை பொறுத்தவரையில் தமக்கு கிடைத்த சுதந்திரத்தை முழுமையாக புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் அதனை பெற்றோர்களிடம் ஆராய்ச்சி செய்து பார்ப்பார்கள். தான் செய்யும் செயலை பெற்றோர்கள் எந்தளவு தூரம் செய்ய விடுவார்கள் என ஆராய்ச்சி செய்வார்கள். இதன்போது நாம் ஒரு வரையறையை மேற்கொள்ளும் போது குழந்தை பொறுப்புணர்வை கற்றுக் கொள்கின்றது. மாறாக சிறிய குழந்தைதானே அல்லது எனது குழந்தைக்கு இல்லாததது வேறு யாருக்கு என்றவாறு சுதந்திரத்தை குழந்தைக்கு வழங்கும் போது அதனை சரியாக புரிந்துகொள்ள முடியாத குழந்தைகள் அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த ஆரம்பிக்கின்றார்கள். இதுவே பிற்காலத்தில் பிடிவாதகுணமாக உருவெடுக்கின்றது. குழந்தை பிடிவாதம் பிடிக்க பிடிக்க நாம் வழங்கும்போது அதன் வீரிய தன்மை அதிகரிக்கின்றது.

உதாரணமாக தான்  அழுதால் தன்னை தூக்குவார்கள் என்ற புரிதலுடன் வளரும் குழந்தை   தேவையை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு தடவையையும் அழ ஆரம்பிக்கும். அதனை கண்டுகொள்ளாது விடும்போது நாம் தூக்கும் வரை அழுதுகொண்டு இருக்கும். அல்லது முதலில் அம்மாவுக்கு மட்டும் கேட்குமாறு அழுத குழந்தை பின்னர் சுற்றி உள்ளவர்களுக்கும் கேட்குமாறு அழுகையின் சத்தத்தை உயர்த்தும். இதுவே testing of limit எனப்படும்.  தாம் பிரச்சினையை ஏற்படுத்தும்போது நமக்கு அதற்குண்டான பெறுபேறு நாம் எதிர்பார்க்கும் நபரிடம் இருந்து கிடைக்கின்றதா என குழந்தை ஆராய்ச்சி செய்யும் நிலையாகும்.

இதே போல gadgetஇற்கு addictஆன குழந்தை அதனை அவர்களிடம் இருந்து பறிக்கும்போது ரொம்பவும் சோர்வாக உள்ளவர் போல நடிப்பார்கள். அதனை கண்டுகொள்ளாது விடும்போது மனஅழுத்தத்தில் உள்ளவர்கள் போன்ற நடத்தையை காண்பிப்பதும் testing of limitஇன் ஒரு வகையாகும்.


பிடிவாதம் பிடிக்கும் குழந்தையை எவ்வாறு கையாளலாம்?      


1. குழந்தை பிடிவாதம் பிடிக்கும் போது அதற்கு எந்த ஒரு பிரதிபலிப்பையும் வழங்காதிருத்தல்.

குழந்தைகளை பொறுத்தவரையில் தான் நினைத்ததை சாதிப்பதற்காக பல உத்திகளை கையாள்கின்றனர். சில குழந்தைகள் அழுது சாதிப்பார்கள். சிலர் அடித்து சாதிப்பார்கள். சிலர் முரட்டுத்தனத்தை கையாண்டு சாதிப்பார்கள். எதை செய்தால் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்பதில் நேரடி தொடர்பு உண்டு. அந்த தொடர்பினை துண்டிக்காதவிடத்து ஒரு புதிய பழக்கத்தை குழந்தைகளிடம் உருவாக்க முடியாது.

எனவே குழந்தை பிடிவாதம்பிடிக்கும் போது நாம் எந்த ஒரு பிரதிபலிப்பையும் கொடுக்க கூடாது. அறிவுரைகள் மற்றும் வார்த்தைகளாக கூட எமது பிரதிபலிப்பு இருக்க கூடாது. அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு எமது கவனத்தை அவர்களிடம் இருந்து திருப்புதல் அவசியமாகும். குழந்தை testing of limitயை தாண்டும் போது தனது செயலால் பயனில்லை என்பதை உணர்வதனால் அந்த எதிர்மறையான பழக்கத்தை  மேலும் விருத்தி செய்யாது.

2. வீட்டிலுள்ள எல்லோரும் குழந்தை வளர்ப்பில் ஒரே ஒழுங்கை பின்பற்றல்.

ஒரு பழக்கத்தை குழந்தையிடம் இருந்து இல்லாதொழிக்க வேண்டுமென்றால் வீட்டில் உள்ள எல்லோரும் ஒரே குரலில் பேசினாலே ஒழிய அதனை இல்லாதொழிக்க முடியாது. உதாரணமாக குழந்தை அழுதாலும் நான் தூக்க மாட்டேன் என்ற கொள்கையை தாய் கடைபிடிக்க வீட்டிலுள்ள தாத்தா பாட்டி அதனை பின்பற்றாமல் இருக்கும் போது குழந்தையின் அழுகையை ஒரு போதும் இல்லாமலாக்க முடியாது.

3. எந்த ஒரு சூழ்நிலையிலும் குழந்தை வளர்ப்பில் கடைபிடிக்கும் ஒழுங்குகளில் மாற்றத்தை கொண்டுவராதிருத்தல்.

பொதுவாக குழந்தைகள் வீட்டுக்கு விருந்தினர்கள் வரும்போது அல்லது வெளி இடங்களுக்கு கூட்டிச்செல்லும்போது அவர்களை எதிர்த்து திட்ட மாட்டார்கள் என உணரும் போது  தமது பிடிவாத குணத்தை அதிகம் காண்பித்து தனது தேவைகளை சாதிக்க நினைப்பார்கள். எனவே  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது வளர்ப்பு முறையில் கடைபிடிக்கும் ஒழுங்குகளில் மாற்றத்தை கொண்டு வராமல் இருப்பது அவசியமாகும்.

           

www.drsanoosiya.blogspot.com.
2020.07.01

No comments:

Post a Comment