Tuesday 12 May 2020

குழந்தைகளை எவ்வாறு தொழுகைக்கு தயார்படுத்தலாம்?




''நான் எனது நண்பியுடன் காரில் சென்றுக்கொண்டிருக்கும்போது என்னுடைய கையடக்க தொலைபேசி ஒலித்தது. ஒலிபெருக்கியில் அந்த அழைப்புக்கு மறுமொழியளித்தேன். மறுபக்கத்தில் எனது 18 வயது மகன் இவ்வாறு அழைத்தான்....  

என்னை பாடசாலையிலிருந்து மூன்று மணிக்கு முன்னால்  வந்து கூட்டிச்செல்லுங்கள். ளுஹர் தொழுகையை நான் miss பண்ண விரும்ப இல்லை'  என்று.

ஒன்றுக்கு இரண்டு முறை 'நான் நேரம் சென்று வரமாட்டேன்' என வாக்குறுதி அளித்த பிற்பாடே  அவரது  தொலைபேசி அழைப்பை துண்டிக்க முடிந்தது. எமது உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த நண்பி ''எவ்வாறு உன்னால் தொழுகைக்கு இந்த அளவு முக்கியத்துவம்  வழங்கும்  குழந்தையை உருவாக்க முடிந்தது என்று நீ எனக்கு சொல்லியே ஆக வேண்டும்'' என்றார். 'எல்லாம் அல்லாஹ்வின் கிருபையினால் ஏற்பட்டது' என சுருக்கமாக பதிலளித்தேன். இந்த பதிலில் அவர் திருப்தி அடையவில்லை என்பது அவரது முகப்பாவனையில் புரிந்துக்கொண்டேன். இதற்கும் மேலதிகமாக அவர் எனது வாழ்க்கையில் இதற்காக பயன்படுத்திய உத்திகளை எதிர்பார்ப்பதை உணர்ந்துக்கொண்டேன்''

இது Parenting expert Hina Khan-Mukhtar அவர்களின் வாழ்க்கை அனுபவமாகும். அவர் குழந்தை வளர்ப்பில், தொழுகையை தனது குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய விதம் அற்புதமானவை. அவையாவன  

1.ஏழு வயது வரைக்கும் தொழுகையை கடைபிடிக்குமாறு எந்தவித அழுத்தத்தையும் வழங்காதிருத்தல்.

தனது குழந்தை சிறு வயதிலிருந்தே தொழுகையின் சுவையை உணர்ந்துக் கொள்ள வேண்டுமென்ற அவாவில் அநேகமான பெற்றோர்கள், தாம் தொழும்போது குழந்தைகளை வற்புறுத்தி தொழுமிடத்தில் வைத்திருப்பதையும், தொழாவிட்டால் மலக்குகள் உன்னை கெட்ட பிள்ளை என எழுதிவிடுவார்கள்,  அல்லாஹ் உன்னை விரும்பமாட்டான் என்று கூறுவதையும் நான் அவதானித்துள்ளேன். அவர்களது நோக்கங்கள் தூய்மையானதாக இருந்தாலும் படைத்தவன் ஒரு நோக்கத்துடனேயே ஏழு வயது வரை குழந்தைகளுக்கு தொழுகையை கடமையாக்கவில்லை என்பதை நான் உணர்கின்றேன். எனவே ஏழு வயது வரைக்கும் எனது குழந்தைகளுக்கு  விரும்பினால் தொழுவதற்கும் தொழாமல் இருப்பதற்கும் பூரண சுதந்திரத்தை வழங்கினேன்.


2.குழந்தை தொழுகையை ஆரம்பிக்கும் நாளை என்றும் ஞாபகத்தில் வைத்திருக்கும் வகையில் கொண்டாடுதல்.

எனது குழந்தை ஏழு வயதை அடைந்த போது வாழ்த்து அட்டைகளை வாங்கி அதனை எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பகிர்ந்தளித்தேன். அதில் குழந்தைகளின் வயதிற்கு ஏற்றாற் போல தொழுகை சம்பந்தமான விடயங்களையும்   அவர் தொழ  ஆரம்பிப்பதற்கான வாழ்த்தையும்  தெரிவித்து எழுதி குழந்தையிடம் வழங்குமாறு வேண்டினேன். இதன் பிரதான நோக்கம் குழந்தையை தொழுகைக்கு உற்சாகப்படுத்துவதாக இருந்தது.

இதேபோல எனது நண்பி ஒருவர் அவரது குழந்தைக்காக ''salah party'' என்ற வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தார். அங்கு பலவகையான இனிப்புப் பண்டங்கள் பரிமாறபட்டதுடன் தொழுகையை மையப்படுத்தி விளையாட்டுக்களும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. மேலும் வைபவத்தின் இறுதியில் ''Prayer chart'' வழங்கப்பட்டது. அதில் ஒரு நாளைக்கு எத்தனை தடவை தொழவேண்டுமென்ற தகவல்கள் வழங்கப்பட்டிருந்தது.


3.தொழுகையையை படிப்படியாக அறிமுகப்படுத்தல்.

குழந்தை ஏழு வயதை அடைந்தவுடன் ஒரு நேரத்தொழுகையை நிறைவேற்றுவதற்கு தெரிவு செய்யுமாறு வினவினோம். அவர் 'Maghrib' தொழுகையை தெரிவு செய்தார். காரணம் அந்த நேரம் அவரது தந்தை வேலை முடித்து வரும் நேரமாக இருந்தது. அவருடன் இணைந்து கூட்டுத்தொழுகை நிறைவேற்ற ஆசைப்பட்டார்.

''மற்ற பர்ளான தொழுகைகளை நீங்கள் விரும்பினால் தொழுது கொள்ளுங்கள் ஆனால் 'Maghrib'  தொழுகையை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கைவிட வேண்டாம். உதாரணமாக நீங்கள் விளையாடிக்கொண்டோ அல்லது கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி தொழுது கொள்ளுங்கள்.'' என்று தெளிவான அறிவுரை வழங்கினோம். இந்த  விடயத்தை சுமார் ஒரு வருடங்கள் நடைமுறைப்படுத்தினோம். 

இதில் குழந்தை பழக்கப்பட்ட பிறகு இரண்டாவது தொழுகையை அறிமுகப்படுத்தினோம். இதனை சுமார் 6 மாதங்கள் செயற்படுத்தினோம். பின் மூன்றாவது தொழுகையை அறிமுகப்படுத்தினோம். இவ்வாறுஅல்லாஹ்வின் உதவியுடன் 9 1/2 வயதில் குழந்தை 5 நேர தொழுகைகளையும் பின்பற்ற பழகிக்கொண்டார். 10 வயதிற்கு அப்பால் சுன்னத்தான தொழுகைகளை தொழ ஆரம்பித்தார். Star stickers, Calendarயில் ஓட்டுவதன் மூலம் அவர்களது செயற்பாட்டை ஊக்குவித்தோம்.


4.நபிகளாரின் சீராவிலிருந்து தொழுகைக்கு நமது முன்னோர்கள் கொடுத்த முக்கியத்துவத்தை எடுத்தியம்புதல்.  

நபிகளார் மற்றும் அவர்களது தோழர்கள் போர்க்களத்தின்  மத்தியிலும், கடுமையான நோயால் பீடிக்கப்பட்ட நிலையிலும், மரணத்தின் இறுதி தருவாயிலும், எதிரிகளால் சித்திரவதைக்கு உள்ளான நிலையிலும் தொழுகையை கைவிடாத வரலாற்றை சொல்லிக் கொடுத்தோம். இறையச்சம் உள்ளவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தொழுகையை கை விடமாட்டார். என்ற உண்மையை அவர்களுக்கு புரிய வைத்தோம்.


5.தொழுகையின் நோக்கத்தை புரியவைத்தல்.

'படைத்தவனுக்கு தனது அடியான் மீது எவ்வித தேவையும் இல்லாத போதும் அடியானை படைத்ததன்  நோக்கம் அவனை வணங்குவதற்காவே உள்ளது' என்ற உண்மையை அவர்களின் வயதிற்கு ஏற்ற வகையில் விளக்கப்படுத்தினோம். இது வைத்தியர் வழங்கும் Prescriptionயை நோயாளிகள் அவரின் மீது பூரண நம்பிக்கை வைத்து பின்பற்றுவது போல ஒன்றாகும்.

தொழுகையின் ஒவ்வொரு இருப்புக்களின் நோக்கத்தையும் தனித்தனியாக விளக்கப்படுத்தினோம். உதாரணமாக ருகூஹ் அது அரசனுக்கு முன்னால் அடிபணியும் நிலை என்பதனையும், முதல் மனிதனை படைத்த அல்லாஹ் ஷைத்தான் அவருக்கு அடிபணிய மறுத்த வரலாற்றை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்தினோம்.


6.தொழுகைக்கான சிறந்த சூழலை உருவாக்கிக் கொடுத்தல்.

 தொழுகைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் நண்பர் மற்றும் உறவினர் வட்டத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி கொடுத்தோம். உண்ணுவது குடிப்பது போல சாதாரணமாக நாளாந்தம் தொழுகையையும் தவறாமல் கூட்டுத்தொழுகை மூலம்  பின்பற்றும் ஒரு சமூகத்தை பார்த்து எனது குழந்தைகள் வளர வாய்ப்பு ஏற்பட்டது.

மேலும் எமது வாகனத்தில் 'Prayer pack' என்ற ஒன்றை எப்போதும் ஒவ்வொருவருக்கும் தயாராக இருக்கும் வகையில் வைத்திருந்தோம். அதில் 
  • சுத்தமான தொழுகை விரிப்பு
  • வுழு செய்வதற்கான தண்ணீர் நிரப்பிய போத்தல்
  • இயற்கை கடன்களை (Toilet) முடித்த பிறகு மறைவான பாகங்களை கழுவுவதற்காக விஷேடமாக வடிவமைக்கப்பட்ட தண்ணீர் நிரப்பிய போத்தல் (Squeeze bottle)
  •  கிப்லாவின் திசையை இலகுவில் அறிந்துக்கொள்ள திசைகாட்டி
  • விஷேடமாக தொழுகையின் போது பெண்களின் பாகங்களை மறைப்பதற்கான உடைகள்.
  • எமது கைகளில் Smart phone இல்லாத காலத்தில் ஒவ்வொரு மாதத்திற்கான தொழுகை நேர அட்டவணையையும் வைத்திருந்தோம். 
பிள்ளை பாடசாலை கொண்டுசெல்லும் பையிலும்  'Prayer pack' ஒன்றை விஷேடமாக தயாரித்து கொடுத்தோம். பாடசாலையிலும் நானும் கணவரும் முதலில் சென்று குழந்தைக்கு தொழுகைக்கான இடத்தை தயார்படுத்திக்கொடுக்குமாறு அதிபரிடம் வேண்டினோம். 


இதேபோல எனது நண்பி ஒருவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் தனது குழந்தைக்காக 'Prayer corner' என்ற  விசேடமான இடத்தை தொழுகைக்காக உருவாக்கி இருந்தார். அங்கு குழந்தைக்காக விஷேடமாக உருவாக்கப்பட்ட தொழுகை விரிப்பு மற்றும் அழகிய குர்ஆனுடன் கூடிய மேசை என்றவாறு அந்த இடத்தை அழகுபடுத்தி இருந்தார். இது அக்குழந்தையை தொழுகையின் பால் ஈர்ப்பதற்காக சிறந்த சூழலை வழங்கியது.


7.வீட்டிலுள்ள பெரியார்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக தொழுகையை நிலைநாட்டல்

எமது செயற்பாடுகளை எம்மோடு இருந்து கூர்ந்து கவனிப்பவர்கள் எமது குழந்தைகளே. எமது தொழுகையில் பொடுபோக்காக இருந்து விட்டு குழந்தைகளை சிறந்த தொழுகையாளிகளாக மாற்றியமைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.


Reference- seekersguidance.org







No comments:

Post a Comment