Wednesday, 15 January 2020

குழந்தைகள் மீது அதிகம் கோபப்படுகிறீர்களா?


பெரியோர்களாகிய நாங்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கான தவறுகளை செய்கின்றோம். பின்னர் அதனை திருத்த எமது நேரத்தையும் பலத்தையும் பயன்படுத்துகின்றோம். சில நேரங்களில் யாருக்கும் தெரியாமல் அந்த தவறுகளை மூடி மறைக்க முனைகின்றோம்.

ஆனால் எமது பிள்ளைகள் தவறு செய்யும் போது நாம்  அதனை கையாளும் விதம் வேறு விதமாக உள்ளது.

ஏன் செய்தாய்? எப்படி இவ்வாறு செய்ய முடியும்? என்ன பிரச்சினை உனக்கு? இதையா உனக்கு நான் கற்றுத் தந்தேன்? என்று கோபத்தை கக்குகின்றோம்.

எமது எதிர்பார்ப்பு, குழந்தை தனது தவறை உணர்ந்து இது போன்ற தவறுகளை இனிமேல் செய்யாமல் இருப்பதாக இருக்கலாம். ஆனால் நடப்பது அதுவல்ல.



எமது கோபத்தினால் பிள்ளைகள் அச்சுறுத்தலையே உணர்கின்றார்கள். எமது கோபம் அவர்களை ஒரு குற்றவாளியாக உணரச் செய்கின்றது. ஒரு குற்றவாளியாக அவர்களது முழுக்கவனமும் எமது கோபத்திலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்ற எண்ணமாகவே உள்ளது. இதனால் அவர்களது எந்தச் செயல் எம்மை கோபமடையச் செய்தது என்பதனையே மறந்து விடுகின்றார்கள். இறுதியாக அவர்கள் செய்த தவறினை மறந்து விடுவதனால் செய்த தவறிலிருந்து எந்த படிப்பினையையும் அவர்கள் பெற்றுக் கொள்வதில்லை.


ஒவ்வொரு தவறும் ஒரு புதிய விடயத்தை கற்பதற்கான சந்தர்ப்பமாகும். நாங்கள் கோபப்படும் போது குழந்தைகள் கற்பதற்கான சந்தர்பத்தை இழக்கின்றனர். பெற்றோர்களாகிய நாமும் கற்பிப்பதற்கான சந்தர்பத்தை இழக்கின்றோம். இதனால் குழந்தைகள் அதே தவறை திரும்பத் திரும்ப செய்வதற்கான வாய்ப்பு அதிகம்.

ஆகவே குழந்தை வளர்ப்பில் கோபம் என்பது ஒரு ஆரோக்கியமான விடயம் அல்ல.
குழந்தை தவறு செய்யும் போது அமைதியாகவும் தெளிவாகவும் அவர்களது செயல் உங்களை ஏமாற்றச் செய்ததை வெளிப்படுத்துங்கள்.

எந்தச் செயலை கைவிட வேண்டும் என்பதனையும் அதற்கான காரணத்தையும் மாற்று வழிகளையும் எடுத்துக் கூறுங்கள். இதன் மூலம் ஆரோக்கியமான குழந்தை சமுதாயத்தினை உருவாக்குவோமாக.



By ART OF PARENTING at 15th of January 2020

Saturday, 11 January 2020

குழந்தையின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் ஆரோக்கியமான தொடர்பாடல்கள்.


ஒரு விடயத்தை ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஏன் செய்ய வேண்டும்' என்ற புரிதலுடன் வளரும் குழந்தைகள் சுயகட்டுப்பாடு உள்ளவர்களாகவும் தன்னுடைய தலை விதியை தானே தீர்மானிப்பதில் தேர்ச்சிப்  பெற்றவர்களாகவும், சமூகத்தில் இணக்கப்பாடுள்ள பெரியவர்களாகவும்  உருவெடுப்பார்கள்.

இவ்வாறான குழந்தைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றால் பெற்றோர்கள், குழந்தைகளுடனான தொடர்பாடல் திறனை அவர்களது அறிவுக்கு தகுந்த விதத்தில் செம்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.


குழந்தையின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் ஆரோக்கியமான ஐந்து தொடர்பாடல் வழிமுறைகள் பின்வருமாறு.

பயன்படுத்தும் வார்த்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தல்.

அதாவது ஆங்கிலத்தில் ‘If’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘When’ என்ற வார்த்தையை பயன்படுத்தல்.

உதாரணமாக 'சோறு சாப்பிட்டால் பூங்காவிற்கு கூட்டிச் செல்கின்றேன்.'என்று சொல்லும் போது குழந்தை நான் சாப்பிடாவிட்டால் என்ன நடக்கும் என பரிசோதனை செய்து பார்க்கும். இதற்கு மாறாக 'சோறு சாப்பிடும்போது /சாப்பிடுங்கள் நான் பூங்காவிற்கு கூட்டிச்செல்கிறேன் எனும் போது ஒரு நல்ல பழக்கத்திற்கு தூண்டுதலை வழங்குகின்றோம்.

 குழந்தையின் நடத்தையை சீர்செய்தல் குழந்தையை அல்ல.

எப்போதும் குழந்தைகளின் நடத்தைகளை, அவர்களிடமிருந்து வேறுபடுத்தி வையுங்கள். குழந்தைகளுகள் எப்போதும் நல்லவர்கள். அவர்களது நடத்தைகள் நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கலாம் என்பதனை வலியுறுத்துங்கள். 

ஒழுக்கத்தின் நோக்கம் நடத்தையை சீர்படுத்துவதே குழந்தைகளை அல்ல.

ஏசுதலில் பூரணத்துவத்தை பேணுதல்.

பூரணத்துவமாக ஏசுதல் என்றால் என்ன?

இது மூன்று பகுதிகளை உள்ளடக்கியது.
  
  1. கெட்ட பழக்கத்தை நிறுத்துவதற்கான கட்டளை.
  2. அப்பழக்கத்தை நிறுத்த வேண்டியதற்கான காரணம்.
  3. குறிப்பிட்ட கெட்ட பழக்கத்திற்கான மாற்று வழி முறை.

உதாரணமாக எமது குழந்தை, இன்னொரு குழந்தை வைத்திருக்கும் விளையாட்டு பொருளை கேட்டு அந்த குழந்தையை அடிக்கும் பொது,

  1. அந்தகுழந்தையை அடிக்கக் கூடாது என கட்டளை பிறப்பிக்கலாம்.
  2. அவ்வாறு அடிக்கும்போது அந்தக் குழந்தை காயப்படும் என்ற காரணத்தை கூறலாம்.
  3. அடிப்பதற்கு பதிலாக அவரிடம் பொருளை தருமாறு அழகிய முறையில் வினவினால் அவர் தருவார் என்ற மாற்று வழிமுறையை கூறலாம்.


இதன் மூலம் குழந்தைகள் ஒரு பிரச்சினை வரும்போது எவ்வாறு அணுகலாம் என்ற அனுபவக்  கல்வியை கற்றுக் கொள்கின்றது. இது போன்ற சந்தர்ப்பம் எதிர் காலத்தில் ஏற்படும் போது எமது உதவி இன்றி அதனை அணுக கற்றுக் கொள்கின்றது.

Related article:


விதிமுறைகளை (rules) உருவாக்கும் போது அதன் விளைவுகளையும் மற்றும் பயன்களையும் கூறுதல்.

உதாரணமாக சாப்பாட்டு மேசையை சுத்தப்படுத்துவதற்கான நியதிகளை கற்பிக்கும் போது,

சாப்பாட்டை சாப்பிட்ட பிறகு தட்டைகளை சமயலறைக்கு எடுத்துச்சென்று அதனை கழுவும் பாத்திரத்தினுள் இட வேண்டும். (பெரிய குழந்தைகளின், கழுவி அதற்கான இடத்தில் வைத்திட வேண்டும்.) அவ்வாறு செய்யும் போது தட்டைகளில் இலையான்கள் மொய்ப்பதன் மூலம் பரவும் நோய்களை தடுக்கலாம். அதே நேரத்தில் அடுத்த சாப்பாட்டுக்கான நேரத்தின் போது மேசையை சுத்தம் பண்ண வேண்டிய அவசியமும் இல்லை.

நேரத்துடன் போட்டியிட உற்சாகப்படுத்தல்

எல்லாக் குழந்தைகளும் வெற்றியை விரும்புபவர்கள். அவர்களை நேரத்துடன் போட்டியிட விடும் போது ஒரு விடயத்தை செய்வதற்கு உற்சாகமளிப்பதுடன் அதனை விரைவாக செய்யவும் தூண்டுதலை வழங்கலாம்.

 உதாரணமாக ஒரு timerயை  set பண்ணி  அது மணி அடிப்பதற்குள் குறிப்பிட்ட விடயத்தை செய்யுமாறு குழந்தைகளை ஏவுதல்.

இது  பெற்றோர்களின் அதிகார போராட்டம் (power struggle) இல்லாமல் குழந்தைகளிடம் ஒழுக்கத்தை கொண்டு வர சிறந்த வழிமுறை ஆகும். இங்கு பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்குமான சண்டையை  குறைத்து neutral figure ற்கு அதிகாரம் வழங்கப் படுகின்றது.



குழந்தை பருவம் என்பது பல விருத்தி படிமுறைகளை கொண்டது. அது ஆரம்பத்தில் நடமாடாத் தெரியாத தேவைகளை மாத்திரம் வேண்டி நிற்கும் . பின்னர் தேவைக்கு மேலதிகமாக விருப்பங்களையும் எதிர்பார்த்தவர்களாக விருத்தி அடைகின்றார்கள். ஆகவே எமது தொடர்பாடல் திறனையும் அவர்களுக்கு விருத்திக்கு தகுந்தாற் போல அமைத்துக் கொள்வது இன்றியமையாததாகும். 


www.drsanoosiya.blogspot.com

By ART OF PARENTING at 11th of January 2020.





Tuesday, 7 January 2020

குழந்தைகளின் பிழைகளை திருத்துவது எவ்வாறு?


எமது குழந்தைகள் வன்முறைகளும் குழப்பங்களும் மலிந்து கிடக்கும் உலகத்தில் வாழ்ந்து  கொண்டு இருக்கின்றார்கள். இந்த காலகட்டத்தில்  குழந்தைகள் பிழைகளே செய்யக் கூடாது என எதிர்பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். பெற்றோர்களாகிய எமது கடமை குழந்தைகள் பிழைகள் விடும் போது அவர்களை சரியான விதத்தில் வழிகாட்டுவதே.



அதே நேரத்தில் பிழை செய்யும் எல்லா குழந்தைகளையும் ஒரே விதத்தில் அணுக முடியாது. குழந்தைகளின் வயது, முதிர்ச்சி தன்மை, பிழை செய்யும் காலகட்டம் என்பன அவர்களை அணுகும் விதத்தை  தீர்மானிக்கின்றன.

அதனால்தான் குழந்தை உளவியலானது குழந்தைகள் செய்யும் பிழைகளை தப்பு, தவறு, குற்றம் என மூன்று வகையாக வகுக்கின்றது.




தப்பு

ஒரு விஷயத்தை பிரச்சினை படுத்த வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. அதை செய்தால் பிரச்சினை ஏற்படும் என்ற அறிவும் இல்லை.

உதாரணமாக குழந்தைக்கு கண்ணாடி கோப்பை ஒன்றை எடுக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அதனை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஆனால்  அதனை ஒரு கையால் எடுத்தால் உடையும் என்ற அறிவு இல்லை.

இங்கு  குழந்தை, சொல்வதை விளங்கிக்  கொள்ளும் பருவத்தில் இருந்தால் சரியான தகவலை வழங்கலாம். 

''கண்ணாடி கோப்பையை ஒரு கையால் எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுத்தால் அது விழுந்து உடைந்து விடும். அதனை கையில் எடுக்க வேண்டும் என்றால் இரண்டு கைகளால் பிடித்து எடுக்க வேண்டும். அப்போது அது உடையாது.''

related article

 விளங்கிக் கொள்ளும் பருவத்தை அடையாத சிறிய குழந்தையாக இருந்தால் பிள்ளையின் கைக்கு எட்ட முடியாத இடத்தில் கோப்பையை வைத்தல் வேண்டும். அதாவது குழந்தைக்கு எட்டக் கூடாத விடயத்தை அவர்களுக்கு கொடுக்கக் கூடாது. இது Child  proofing எனப்படும்.

தவறு

ஒரு விஷயத்தை பிரச்சினைபடுத்த வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஆனால் அதை செய்தால் பிரச்சினை ஏற்படும் என்ற அறிவு உண்டு.

உதாரணமாக குழந்தைக்கு கண்ணாடி கோப்பை ஒன்றை எடுக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அதனை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஆனால்  அதனை ஒரு கையால் எடுத்தால் உடையும் என்ற அறிவு உண்டு.

இங்கு குழந்தைக்கு மாற்று வழிகளை(choices)  சொல்லி கொடுக்கலாம். 

''ஒரு கையால் பிடிக்க வேண்டும் என்றால் பிளாஸ்டிக் கோப்பையை பயன்படுத்துங்கள். இரண்டு கைகளால் பிடிக்க முடியும் என்றால் கண்ணாடிக் கோப்பையை பயன்படுத்துங்கள்.''

குற்றம்

ஒரு விஷயத்தை பிரச்சினை படுத்த வேண்டும் என்ற எண்ணமும்  உண்டு . அதை செய்தால் பிரச்சினை ஏற்படும் என்ற அறிவும் உண்டு.

உதாரணமாக கண்ணாடி கோப்பையை ஒரு கையால் எடுத்தால் உடையும் என்று தெரியும். அதை உடைப்பதனால்  பெற்றோர்கள் கவலை பட வேண்டும் என்பதற்காக கையில் எடுத்து உடைத்தல்.

இது பெற்றோர்களின் முறையற்ற குழந்தை வளர்ப்பினால் பிறந்ததிலிருந்து உருவாக்கப் படுகின்றது. குழந்தைகள் சொல்வதையோ செய்வதையோ தொடர்ந்து புரிந்து கொள்ளாமல் இருப்பதனாலும் அவர்கள் மீது  அதிகாரத்தையும் வன்முறையையும் திணிப்பதனாலும் பெற்றோர்களை வெண்டுமென்று கஷ்டப்படுத்த அவர்கள் நடந்துகொள்கின்றார்கள்.

இங்கு குழந்தைக்கு தண்டனை வழங்கினாலும் எமது குழந்தை வளர்ப்பிலுள்ள பிரச்சினையை இனங்கண்டு தீர்ப்பதற்கு வழிகளை கண்டறிய வேண்டும்.



ஆகவே குழந்தைகள் பிழை செய்யும்போது அதனை சரியான விதத்தில் அணுகுவதன் மூலம் அவர்களை எதிர் காலத்தில் சிறந்த பிரஜைகளாக உருவாக்குவோமாக!!!!!!!!!

www.drsanoosiya.blogspot.com


By ART OF PARENTING at 7th of January 2020.



Saturday, 4 January 2020

உங்கள் குழந்தைகளை அதிகமாக திட்டுகிறீர்களா?


பெற்றோர்களின் வாழ்க்கையில் தமது குழந்தைகளை ஏசுதல் என்பது இன்றியமையாத நிகழ்வாகும். நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால் உங்கள் குழந்தையை ஏசாமல் ஒரு நாளை கழிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். சில நேரங்களில் நாம் ஒரு நாளை எண்ணிப்பார்க்கும் போது அந்த நாள் முழுவதும் எமது குழந்தையை ஏசுவதிலேயே கழித்திருப்போம். அதே நேரத்தில் எவ்வளவு ஏசியும் பயனற்று போன நாட்களும் உண்டு.

இவை எல்லாம் பெற்றோர்கள் வாழ்க்கையில் சர்வசாதரணமான  விடயமாக இருந்தாலும் எமது ஏச்சுக்கள்  எமது பிள்ளைகளுக்கு இடையில் மதிப்பிழந்து காணப்படுவதற்கான காரணத்தை எப்போதாவது சிந்தித்ததுண்டா?

எமது ஏச்சுக்களில் பிழை உள்ளது என்பதனையும் பூரணத்துவம் இல்லை என்பதனையும் உணர்கிறீர்களா?

நாம் ஒரு குழந்தையை ஏசும்போது எதிர்பார்ப்பது அந்தக் குழந்தை குறிப்பிட்ட செயலை இனிமேல் செய்யக்கூடாது என்பதனையே. அவ்வாறு எதிர் பார்க்கும் நாம் வெறுமனே செய் செய்யாதே என்ற வார்த்தையை மாத்திரம் கூறி கட்டளையை பிறப்பிக்கின்றோம். நாம் இடும் கட்டளைக்கான காரணத்தையோ அதற்கான மாற்று வழிகளையோ பிள்ளைகளுடன் கலந்துரையாட மறுக்கின்றோம்.

எம்மிடம் ஒருவர் எதையாவது செய்யும் படி கட்டளையிட்டால் ஏன் செய்ய வேண்டும் என உரிமையுடன் கேட்கின்றோம் அல்லவா? அதே கேள்வியை உங்கள் குழந்தை கேட்கும்போது நீ எதிர்த்து பேசுகிறாய் என அவர்களை  கண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்?

ஆகவே உங்களின் ஏச்சுக்களின் மூலம் உங்கள் குழந்தைகளிடம் எதிர்பார்க்கும் நடத்தை மாற்றத்தை நீங்கள் காண  வேண்டும் என்றால், உங்கள் ஏச்சுக்கள் பூரணத்துவமாக இருத்தல் வேண்டும்.

பூரணத்துவமாக ஏசுதல் என்றால் என்ன?

இது மூன்று பகுதிகளை உள்ளடக்கியது.
  1.   கெட்ட பழக்கத்தை நிறுத்துவதற்கான கட்டளை.
  2. அப்பழக்கத்தை நிறுத்த வேண்டியதற்கான காரணம்.
  3. குறிப்பிட்ட கெட்ட பழக்கத்திற்கான மாற்று வழி முறை.





உதாரணமாக எமது குழந்தை, இன்னொரு குழந்தை வைத்திருக்கும் விளையாட்டு பொருளை கேட்டு அந்த குழந்தையை அடிக்கும் பொது,

  1. அந்தகுழந்தையை அடிக்கக் கூடாது என கட்டளை பிறப்பிக்கலாம்.
  2. அவ்வாறு அடிக்கும்போது அந்தக் குழந்தை காயப்படும் என்ற காரணத்தை கூறலாம்.
  3. அடிப்பதற்கு பதிலாக அவரிடம் பொருளை தருமாறு அழகிய முறையில் வினவினால் அவர் தருவார் என்ற மாற்று வழிமுறையை கூறலாம்.

இதன் மூலம் குழந்தைகள் ஒரு பிரச்சினை வரும்போது எவ்வாறு அணுகலாம் என்ற அனுபவக்  கல்வியை கற்றுக் கொள்கின்றது. இது போன்ற சந்தர்ப்பம் எதிர் காலத்தில் ஏற்படும் போது எமது உதவி இன்றி அதனை அணுக கற்றுக் கொள்கின்றது.


மாறாக ஏன்  அடித்தாய்? என்று ஒரு அடியை நாம் நமது குழந்தைக்கு திருப்பிக் கொடுக்கும் போதோ அல்லது இதற்கு மேல் இவ்வாறு அடிக்கக்கூடாது என கட்டளை பிறப்பிக்கும் போதோ,குழந்தை அதன் மூலம் எந்த ஒன்றையும் கற்றுக் கொள்ளப் போவதும் இல்லை.
இவ்வாறான சந்தர்ப்பத்தை குழந்தை திரும்பி எதிர்கொள்ளும் போது மீண்டும் அடிப்பதற்கான சத்தியகூறே அதிகம்.

ஆகவே குழந்தைகள் தவறு செய்யும் போது இவ்வாறான ஆரோக்கியமான தொடர்பாடல் திறனை வளர்ப்பதன் மூலம் சிறந்த  பிரஜைகளை உருவாக்குவோமாக.

www.drsanoosiya.blogspot.com

By ART OF PARENTING at 4th of January 2020