Wednesday 15 January 2020

குழந்தைகள் மீது அதிகம் கோபப்படுகிறீர்களா?


பெரியோர்களாகிய நாங்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கான தவறுகளை செய்கின்றோம். பின்னர் அதனை திருத்த எமது நேரத்தையும் பலத்தையும் பயன்படுத்துகின்றோம். சில நேரங்களில் யாருக்கும் தெரியாமல் அந்த தவறுகளை மூடி மறைக்க முனைகின்றோம்.

ஆனால் எமது பிள்ளைகள் தவறு செய்யும் போது நாம்  அதனை கையாளும் விதம் வேறு விதமாக உள்ளது.

ஏன் செய்தாய்? எப்படி இவ்வாறு செய்ய முடியும்? என்ன பிரச்சினை உனக்கு? இதையா உனக்கு நான் கற்றுத் தந்தேன்? என்று கோபத்தை கக்குகின்றோம்.

எமது எதிர்பார்ப்பு, குழந்தை தனது தவறை உணர்ந்து இது போன்ற தவறுகளை இனிமேல் செய்யாமல் இருப்பதாக இருக்கலாம். ஆனால் நடப்பது அதுவல்ல.



எமது கோபத்தினால் பிள்ளைகள் அச்சுறுத்தலையே உணர்கின்றார்கள். எமது கோபம் அவர்களை ஒரு குற்றவாளியாக உணரச் செய்கின்றது. ஒரு குற்றவாளியாக அவர்களது முழுக்கவனமும் எமது கோபத்திலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்ற எண்ணமாகவே உள்ளது. இதனால் அவர்களது எந்தச் செயல் எம்மை கோபமடையச் செய்தது என்பதனையே மறந்து விடுகின்றார்கள். இறுதியாக அவர்கள் செய்த தவறினை மறந்து விடுவதனால் செய்த தவறிலிருந்து எந்த படிப்பினையையும் அவர்கள் பெற்றுக் கொள்வதில்லை.


ஒவ்வொரு தவறும் ஒரு புதிய விடயத்தை கற்பதற்கான சந்தர்ப்பமாகும். நாங்கள் கோபப்படும் போது குழந்தைகள் கற்பதற்கான சந்தர்பத்தை இழக்கின்றனர். பெற்றோர்களாகிய நாமும் கற்பிப்பதற்கான சந்தர்பத்தை இழக்கின்றோம். இதனால் குழந்தைகள் அதே தவறை திரும்பத் திரும்ப செய்வதற்கான வாய்ப்பு அதிகம்.

ஆகவே குழந்தை வளர்ப்பில் கோபம் என்பது ஒரு ஆரோக்கியமான விடயம் அல்ல.
குழந்தை தவறு செய்யும் போது அமைதியாகவும் தெளிவாகவும் அவர்களது செயல் உங்களை ஏமாற்றச் செய்ததை வெளிப்படுத்துங்கள்.

எந்தச் செயலை கைவிட வேண்டும் என்பதனையும் அதற்கான காரணத்தையும் மாற்று வழிகளையும் எடுத்துக் கூறுங்கள். இதன் மூலம் ஆரோக்கியமான குழந்தை சமுதாயத்தினை உருவாக்குவோமாக.



By ART OF PARENTING at 15th of January 2020

No comments:

Post a Comment