Monday 20 January 2020

உங்கள் குழந்தைகள் மீது அதிகாரத்தை பயன்படுத்துகிறீர்களா?


நான் உனது தாய்/தந்தை நான் சொல்வதை நீ கேட்டாக வேண்டும் என்ற அதிகாரத்தொனி எமது வீடுகளில் அடிக்கடி ஒலிப்பதை கேட்டிருக்கின்றோம். இது குழந்தை வளர்ப்பில் அவசியமாக தவிர்க்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஆரோக்கியமான மனித சமுதாயம் இந்த உலகத்தில் எதிர்காலத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்றால், ஆரோக்கியமான குழந்தை சமுதாயம் இன்று விதைக்க பட்டாலே உண்டு. அத்தகைய குழந்தை சமுதாயத்தை உருவாக்கும் பாரிய பொறுப்பை பெற்றோர்களின் கைகளில் வழங்கி அதற்காக கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் அவர்களிடமே எம்மை படைத்தவன் வழங்கியுள்ளான். அந்த அதிகாரமானது சரியான சமநிலையில் பயன்படுத்தப்படுவது அவசியமாகும். அதனை மிதமிஞ்சி பயன்படுத்துவதோ  பயன்படுத்தாது விடுவதோ குழந்தை வளர்ப்பில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.


குழந்தைகள் என்பவர்கள் பொம்மைகள் அல்ல. அவர்களுக்கும் தேவைகளும் உணர்ச்சிகளும் உள்ளன. ஆனால் அவற்றை சரியான விதத்தில் வெளிப்படுத்த முடியாத சிறிய மனிதர்கள்.  எமது அதிகார வலிமையை (Ego) உணர்த்துவதற்காகவோ அல்லது நான் என்ற அகங்காரத்தை தன்னிறைவு செய்வதற்காகவோ சட்டங்களை அமைத்து அதனை பின்பற்ற வேண்டும் என்ற கட்டளையை குழந்தைகளுக்கு வழங்கும் பொழுது அவர்களது உணர்ச்சிகள் அடக்கப்படுவதுடன் சிலவேளை அது கிளர்ச்சியாகும் சந்தர்ப்பங்களும் உண்டு.

இத்தகைய அடக்கு முறையை எதிர்கொள்ளும் குழந்தைகள் சமத்துவத்தை உணரமாட்டார்கள். சமத்துவத்தை உணராத குழந்தைகள் சுயமதிப்பை இழந்து விடுவார்கள்.



ஆகவே குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான சமத்துவமான கலந்துரையாடலுடன் சரியான சமநிலையில் அதிகாரங்கள் பேணப்பட்டு குடும்பத்திற்கும் சமூக கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையில் வீடுகளில் சட்டங்கள் அமைக்கப்படுவதன் மூலம்  சுயமதிப்புள்ள குழந்தை சமுதாயத்தை கட்டியெழுப்புவோம்.


By ART OF PARENTING at 20th of January 2020

No comments:

Post a Comment