Tuesday 23 June 2020

குழந்தைகள் ஏன் பொய் சொல்கின்றார்கள்?



குழந்தைகளை பொறுத்தவரையில் மூன்று வயதிலிருந்தே பொய் சொல்ல ஆரம்பிக்கின்றனர். இந்த வயதிலேயே எமது மனத்திலுள்ளவற்றை எமது பெற்றோர்களால் புரிந்துகொள்ள முடியாது என்ற உண்மையை புரிந்து கொள்கின்றனர். 4-6 வயதில் நமக்கு தெரியாத அளவுக்கு பொய் சொல்ல ஆரம்பிப்பார்கள். 8 வயதளவில் பொய்க்கும் உண்மைக்கும் வித்தியாசம்தெரியாத அளவுக்கு பொய் சொல்லுவார்கள்.

உளவியலை பொறுத்த வரையில் குழந்தைகள் பொய் சொல்வதற்கான காரணத்தை பிரதானமாக மூன்று வகையாக பிரிக்கின்றது.
  1. தான் செய்த செயல் தண்டனையை பெற்றுத்தரும் என உணரும்போது
  2. மற்றவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காக
  3. தான் பொய் சொன்னால்தான் தன்னை கவனிப்பார்கள் என்ற உணர்வை குழந்தை பெறும் போது


தான் செய்த ஒரு விடயம் தனக்கு தண்டனையை அல்லது அச்சுறுத்தலை கொண்டு வரும் என பயப்படும் போது  குழந்தை பொய்சொல்லும்.


உதாரணமாக பரீட்சையில் நல்ல பெறுபேரு கிடைக்காவிட்டால் பெற்றோர் தண்டிப்பார்கள் அல்லது ஏசுவர்கள் என பயப்படும் குழந்தை மதிப்பெண்ணை மாற்றி எழுதுதல் அல்லது ஒழித்துவிட்டு ஆசிரியர் தரவில்லை எனக்கூறல் என்பவற்றை குறிப்பிடலாம்.

 எல்லோருடைய கவனத்தையும் தன்  பக்கம் திருப்புவதற்காக நடந்த விடயத்தை பெரிதுபடுத்தி பொய்  சொல்லுதல்.

இது ஆரம்பத்திலிருந்து பெற்றோர்கள் சிறிய விடயங்களுக்கும் பெரிய பாராட்டு கொடுப்பதனால் ஏற்படுகின்றது. உதாரணமாக குழந்தை சித்திரம் என்ற பெயரில் எதை கிறுக்கினாலும் அதனை வெகுவாக பாராட்டுவதோடு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுதல். இதன்போது குழந்தை சிறிய விடயங்களுக்கும் பெரிய பாராட்டுதலை பெற்று பழகி இருப்பதால் தானும் பாடசாலையில் ஆசிரியர் சிறிதாக சொன்னாலும் தன்னை காலை கூட்டத்தில் அழைத்து சொன்னார் என விடயத்தை பெரிதுபடுத்தி பொய் சொல்ல ஆரம்பிக்கும்.

தான் பொய் சொன்னால்தான் தன்னை கவனிப்பார்கள் என்ற உணர்வை குழந்தை பெறும் போது குழந்தை பொய் சொல்லுதல்.

தாய் தந்தை இருவரும் தொழில் பார்க்கும் வீடுகளில் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்காத போது அவர்களை தன்  பக்கம்  ஈர்ப்பதற்காக குழந்தை  பொய் சொல்ல ஆரம்பிக்கின்றது. உதாரணமாக மற்ற பெற்றோர்கள்போல தன்னுடைய பெற்றோரும் பாடசாலை விடயங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளதாக பொய் சொல்லி பாடசாலைக்கு  கூட்டிச் செல்லல்.

இந்த மூன்று வகையான பொய்க்கும் பெற்றோர்களினுடைய வளர்ப்பிலேயே மாற்றம் தேவைப்படுகின்றது.

குழந்தைகள் பொய் சொல்வதை எவ்வாறு தடுக்கலாம்?


பெற்றோர்கள் முன்மாதிரியை கடைபிடித்தல்.


குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க வேண்டுமென்றால் உண்மை சொல்வதற்கான சூழலை உருவாக்குதல் வேண்டும். சிறிய விடயங்களுக்கும் குழந்தைகளிடம் பொய் சொல்லுதலை இயன்றளவு குறைத்தல். உதாரணமாக தனக்கு பேனை வாங்கி வருமாறு குழந்தையிடம் கூறும்போது கடை மூடியுள்ளது என பொய்  சொன்னால் 7 வயதை அடைந்த குழந்தையால் பெற்றோர் பொய் சொல்கின்றாரா இல்லையா என்பதனை இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

அதேநேரத்தில் நமக்காக குழந்தைகளை பொய் சொல்ல வைக்காதிருத்தல். உதாரணமாக ஒருவரின் தொலைபேசி அழைப்பை தவிர்ப்பதற்காக குழந்தையிடம் அப்பா வீட்டில் இல்லை என்று மறுமொழி வழங்குமாறு கூறுதல். இங்கு பெற்றோர்கள் பொய் சொல்லும்போது நாமும் பொய் சொல்லலாம் என்பதனை குழந்தை புரிந்து கொள்கின்றது.

குழந்தைகளை பயமுறுத்த சமாதானப்படுத்த பேய் சூனியம் மந்திரம் போன்ற விடயங்களை கூறுதல். இதன் போது நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கின்றது என்று புரிந்து கொள்ள முடியாமல் குழந்தைகளும் தமது நிகழ்வுகளில் இவற்றை வெளிப்படுத்தும்.

குழந்தை தோல்வி வெற்றி எதை சந்தித்தாலும் ஆதரவாக இருக்க வேண்டும். 



வெற்றியின் பொது வெகுவாக பாராட்டுவதோடு தோல்வியின் போது  தண்டிக்கும்போது அதிலிருந்து தப்பிப்பதற்காக பொய் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

பெற்றோர்கள்  நேரம்கவனம்புரிதல்அன்பு சரியான விதத்தில் குழந்தைகளுக்கு வழங்ககுதல்.



பெற்றோர்களது நேரம், கவனம், புரிதல், அன்பு சரியான விதத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படாத போது குழந்தை அதனை பெற்றுக்கொள்ள பொய் சொல்வதன் மூலம் கவனத்தை தன் பக்கம் திருப்புவார்கள். இதனை தவிர்க்க பெற்றோர்கள் எவ்வளவு busyயாக இருந்தாலும் குழந்தைகளுடன் quality time செலவழித்தல் அவசியமாகும்.

ஒரு விடயத்தை குழந்தை செய்யும்போது அதற்கு சரியான விதத்தில் feedback கொடுத்தல்.



ஒரு விடயத்தை குழந்தை செய்யும்போது அதனை வெகுவாக பாராட்டும்போது குழந்தைகள் தனது திறமை மீது மிதமிஞ்சிய நம்பிக்கை கொண்டு தான் தோல்விகளை சந்திக்கும் போது அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் பொய் சொல்லுவார்கள். குழந்தை சித்திரம் ஒன்றை வரைந்து காட்டும்போது நன்றாக உள்ளது என வெகுவாக பாராட்டாமல் ''இது எனக்கு பிடித்துள்ளது  ஆனால் இந்த இடத்தில் இந்த நிறம் தீட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்'' எனக்கூறல். இதன் போது கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மனப்பக்குவம் ஏற்படும்

குழந்தை தொடர்ந்து பொய் சொல்லிக்கொண்டு இருந்தால் ''நீ சொல்வது எனக்கு பிடிக்கவில்லை அது உண்மை இல்லை என்று எனக்கு தெரியும்'' என்றவாறு வழங்குங்கள் மாறாக ''நீ கெட்டவன் இப்படியே சொல்லிக்கொண்டு இருந்தால் உன்னை யாருக்கும் பிடிக்காது'' என்றவாறு அவர்களது சுயமதிப்பை பாதிக்கச் செய்யும் வார்த்தைகளை கூற வேண்டாம்.

மேலும் குழந்தை சிறிய விடயத்திற்கு உண்மை சொன்னாலும் அதனை பாராட்டுங்கள். சந்தோஷமாக உள்ளதாக கூறுங்கள்.



சிறிய குழந்தைகள் போய் சொல்லும்போது அதனை ஆரம்பத்தில் பெற்றோர் ரசிப்பது வழக்கம். அதனை நாம் வெளிப்படுத்தும்போது அவர்களது பொய்யின் அளவு விரிவாக சாத்தியம் அதிகம். எனவே சிறிய குழந்தைகளின் பொய்யை நாம் உள் மனதால் ரசித்தாலும் அதனை வெளிப்படையாக காட்டுதல் கூடாது.

உண்மையின் வலிமையையும் பொய்யினால் ஏற்படும் பாதிப்பையும் வெளிப்படுத்தும் moral stories சொல்லி கொடுத்தல்.



எமது வளர்ப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியும் தொடர்ந்து பொய் சொல்லும் பழக்கத்தை குழந்தை கைவிடாத போது தண்டித்தல் அவசியமாகும். இல்லாவிட்டால் குழந்தை மீதுள்ள நம்பிக்கை மற்றவர்களால் இழக்கப்படும் அதே வேளை குழு செயற்பாடுகளில் அவர்களால் பங்கு கொள்ள முடியாது போகும்.

www.drsanoosiya.blogspot.com.
2020.06.24

Wednesday 17 June 2020

அன்பின் மொழிகள்


நாம் எமது குழந்தைகளிடம் எமது அன்பை வெளிக்காட்டுகிறோம். சிலவேளைகளில் அதனை குழந்தைகளால்  புரிந்துக்கொள்ள முடியவில்லை என நாம் கவலைப்படுவதுண்டு. காரணம் அன்பு என்பது ஒரு மொழியை போன்றது. ஒரு மொழியை பயன்படுத்தி எமது உணர்வுகளை ஒருவரிடம் வெளிப்படுத்தும் போது அதனை புரிந்துக்கொள்ள முடியுமானால் மாத்திரமே அது ஒரு ஆக்கப்பூர்வமான அனுபவமாக மாறும். அதே போலத்தான் அன்பும் அதன் மொழியை புரிந்துக்கொள்ள முடியாவிட்டால் முழுமையான அனுபவத்தை பெற முடியாது.

Gary Chapman என்பர் அன்பை ஒரு மொழியாக ஐந்து வகையான முறையில் புரிந்துக் கொள்ள முடியும் என்கிறார்.

பொருள் அளவில் அன்பை புரிந்துக் கொள்ளல் (Through gift)

இத்தகையோர் பொருள் அளவில் அன்பை பரிமாறிக்கொள்பவர்கள். தனது அன்பை பொருளாக மற்றவர்களுடன் பரிமாற எண்ணுவதுடன் மற்றவர்களின் அன்பையும் அதன் மூலமே எதிர்பார்ப்பவர்கள்.

இத்தகைய குழந்தைகள் தம்மால் முடிந்த சிறிய பரிசுப்பொருட்களை தனது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது அன்பை வெளிப்படுத்த வழங்குவார்கள். தாமும் மற்றவர்களிடமிருந்து தம்முடைய முக்கியமான நாட்களில் பரிசுப்பொருட்களை எதிர்பார்ப்பார்கள்.



வார்த்தைகள் (Words of appreciation) மூலம் அன்பை புரிந்துகொள்ளல்

தனது  அன்புக்குரியவர்களின் செயற்பாடுகள் பிடித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களது அன்பை பாராட்டுதல் மூலம் வெளிப்படுத்துவார்கள். அவர்களும் அதையே எதிர்பார்ப்பார்கள்.

உதாரணமாக தனது தாயின் சாரி அழகாக உள்ளது எனக் கூறல். தான் எதையாவது செய்த பிறகு தாயிடம் good சொல்லுமாறு கூறுதல் போன்றவைகளை குறிப்பிடலாம்.

இதன் போது  குழந்தைகளை திருப்திபடுத்துவதற்காக பொய் சொல்லுதல் கூடாது. மேலும்  வயதிற்கு ஏற்றபடி பாராட்டும் போதே அது ஆக்கபூர்வமான செயற்பாடாக அமையும். உதாரணமாக Teenage குழந்தையிடம் போய் 'நீ shoe lace கட்டியது  அழகாக உள்ளது' எனும்போது அது குழந்தைக்கு பகடியாக மாறிவிடும்.



செயற்பாடுகளின் (Act of service) மூலம் அன்பை புரிந்துக்கொள்ளல்.

இத்தகையோர் செய்யக்கூடிய வேலைகளில் அன்பை வெளிப்படுத்துபவர்கள். உதாரணமாக பொருட்களை தூக்கி கொடுப்பதன் மூலம் பெற்றோர்களுக்கு உதவி செய்து அன்பை வெளிப்படுத்துவார்கள். அவர்களும் தனது பெற்றோர் தான் Home work செய்யும்போது   தன்னுடன் உட்கார்ந்து  உதவி செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.


Quality time மூலம் அன்பை புரிந்துகொள்ளல்

தனக்கு பிடித்தமானவர்களுடன் கூடவே இருப்பதை ஆதரவு என நினைப்பவர்கள். இவர்கள் தனக்கு உதவி செய்ய வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் தன்னுடன் கூட இருக்க வேண்டுமென எண்ணுவார்கள். 

குழந்தைகள் பெற்றோர்கள் வீடு வேலை செய்யும் போது அவர்களுக்கு உதவி செய்யா விட்டாலும் அவர்களுடன் கூடவே அமர்ந்திருப்பார்கள். அவர்களும் தனது பெற்றோர் மற்ற எதிலும் கவனம் செலுத்தாமல் தன்னுடன் செலவழிக்க வேண்டும் என எண்ணுவார்கள்.



தொடுகை (Touch) மூலம் அன்பை புரிந்துகொள்ளல்

இவர்கள்  வார்த்தைகள் மூலம் 'நான் உன்னுடன் அன்பாக உள்ளேன்' என எவ்வளவு கூறினாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அன்பை தனக்கு பிடித்தமானவரை கட்டிப்பிடிப்பதன் மூலம் கையை பிடித்துக் கொள்வதன்  மூலம்  உணர்பவர்கள். 
பாடசாலையில் ஆசிரியரின் புடவையை பிடித்துக்கொண்டு செல்வார்கள். 



குழந்தைகளை சில நாட்கள் கூர்ந்து கவனிப்பதன் மூலம்  அவர்களது அன்பின் மொழியை புரிந்து கொள்ள முடியும். அவர்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்  போல  அன்பை அவர்களிடம் வெளிப்படுத்தும்போது சிறந்த பாதுகாப்பையும் நம்பிக்கையையும் எம்மிடம் உணர்வார்கள். இது எமக்கும் குழந்தைகளுக்கும் இடையில் சிறந்த உறவு பாலத்தை ஏற்படுத்த வாய்ப்பாக அமையும்.
  
www.drsanoosiya.blogspot.com.
2020.06.17