Thursday 27 February 2020

குழந்தைகளை பாதிக்கும் இலத்திரனியல் சாதனங்கள்


இன்றைய நவீன உலகில் குழந்தைகளை மனரீதியாக பாதிக்கும் நச்சுப் பொருட்கள் என பிரதானமாக ஐந்து வகையான நச்சுப்பொருட்களை உளவியலாளர்கள் முன்வைக்கின்றார்கள். அவையாவன

  1. கார்ட்டூன் 
  2. தொடர் நாடகங்கள்
  3. சினிமா 
  4. விளம்பரங்கள் 
  5. வீடியோ விளையாட்டுக்கள்



உடலில் புற்றுநோய் என்பது நம்மை அறியாமலே ஊடுருவிச் சென்று எம்மை அழித்து விடுவதுபோல இந்த ஐந்து வகையான நச்சுப்பொருட்களும் நம்மை அறியாமல் எமது சமுதாயத்தில் ஊடுருவி குழந்தைகளின் எதிர்காலத்தை அழித்துக்கொண்டு இருக்கின்றன.

தனித்தனியாக இந்த நச்சுப்பொருட்களை நோக்குவதற்கு முன்னால் பொதுவாக அதிக நேரம் குழந்தைகள் இலத்திரனியல் சாதனைகளை பயன்படுத்தும் போது ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதனை முதலில் பார்ப்போம்

  • குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

உதாரணமாக தொடர்ந்து கார்ட்டூன்களை பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகளின் சிந்தனையை தூண்டும் மூளையின் பகுதி (Prefrontal cortex) வளராமல் சிறிதாக வாய்ப்பு அதிகம். தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மேல் Cartoon பார்க்கும் குழந்தைகளின் சுயசிந்தனை பாதிப்படைந்து Problem solving போன்ற திறன்கள் இல்லாமலாகின்றன.

  • குறும் பார்வை குறைபாடு (Myopia or short sight)போன்ற கண் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
  • குறைவான உடற்பயிற்சி மற்றும் முறையற்ற உணவுப் பழக்கங்களுக்கு சிக்குண்டு Obesity போன்ற பிரச்சினைகளுக்கு சிறு வயதிலேயே ஆளாகின்றனர்.
  • குழந்தைகளின் தூக்க வட்டத்தை (Sleep cycle) பாதிப்படையச் செய்து உடல் உள  ரீதியான குழந்தைகளின் வளர்ச்சியை பாதிப்படயச் செய்கின்றது.
  • மற்றவர்களுடன் தொடர்பாடல் திறன் குறைவடைவதால் குழந்தையின் சமூக வளர்ச்சியில் பாதிப்பை செலுத்துகின்றது.
  • இலத்திரனியல் சாதனங்களுக்கு அடிமையாக்குதல் (Gadget Addiction) என் கற்பனை செய்ய முடியாத பிரச்சினைக்குள் குழந்தைகள் உள்வாங்கப்படுகின்றனர்.
  • உடனடி மனநிறைவு (Instant gratification) என்பது இன்னொரு வகையான பாதிப்பாகும். இது பிற்காலத்தில் மனச்சோர்வு (Depression) போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றனர்.
  • தொடர்ந்து இலத்திரனியல் சாதனங்கள் பாவிக்கும் குழந்தைகள் கூர்ந்து கவனிக்கும் திறனை (Concentration ability) இழக்கின்றனர்.


குழந்தைகளுக்கு Screen time எவ்வளவு நேரம் வழங்குவது ஆரோக்கியமானது? 


2018 AAP (American Academy of Pediatrics) Screen time guideline எமக்கு வழங்கும் தகவல் என்னவென்றால் பதினெட்டு மாதங்களுக்கு குறைவான வயதுடைய குழந்தைகளை பொறுத்தவரையில் Screen time வழங்குவது என்பது எந்த விதத்திலும் அனுமதிக்கப் படவில்லை.


2-5   வயதுடைய குழந்தைகளை பொறுத்தவரையில் Screen time ஆகக்கூடியது 1 மணித்தியாலம் வழங்க முடியும். High quality program  எனப்படும் கல்வி சம்பந்தமான விடயங்கள் பார்ப்பதற்காகவே இவை அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் போது கட்டாயமாக பெரியோர் ஒருவர் விசேடமாக பெற்றோர்களில் ஒருவர் அது சம்பந்தமாக அறிவுறுத்தல்களை வழங்க குழந்தைகளுடன் அமர்ந்திருக்க வேண்டும் என ஆலோசனை வழங்குகின்றார்கள்.



www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 27th  of February 2020

Saturday 22 February 2020

வயதிற்கு ஏற்ற வகையில் கணிதத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தல் எவ்வாறு?




1-2 years Baby

குழந்தைகள் பொருட்களை காணும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  அதனை எண்ணி காட்டுதல்.

உதாரணமாக பூங்காவிற்கு கூட்டிச்சென்றால் அங்குள்ள ஊஞ்சல் எத்தனை உள்ளது என வினவி அதற்கான விடையை கூறுதல். அதேபோல விளையாட்டுப் பொருட்களை எண்ணுதல். 

இந்த விளையாட்டு குழந்தைகளின் முதல் இரண்டு கணிதம் கற்றலின் படிகளை பூர்த்தி செய்கின்றது.

இதன்மூலம் பொருட்களை எண்ணுவதற்கு இலக்கங்கள்  பயன்படுத்தப்படுகின்றது என்பதனையும் அதேபோல ஒவ்வொரு இலக்கத்துக்கும் சொல் அல்லது பெயர் உண்டு என்பதனையும் குழந்தை கற்றுக் கொள்கின்றது.



2-4 Years

கூழாங்கற்கள் போன்ற சிறிய பொருட்களை சேகரித்து அவற்றை 2,3,4 கற்கள்  கொண்ட வரிசை வரிசையாக அடுக்கி அவற்றை எண்ணுதல்.
இந்த வயதெல்லை குழந்தைகள் பாவிக்காத போத்தல் மூடிகள் போன்றவற்றை சேகரிப்பதில் ஆர்வம்காட்டுவார்கள். இவைகளை நாம் எண்ணுவதற்கான சந்தர்ப்பமாக ஏற்படுத்தி கொடுக்கலாம்.

இலக்கமாக பெயர் சூட்டப்பட்ட எண்ணிக்கை பொருட்களின் எண்ணிக்கைக்கு சமன் என்பதனை கற்றுக்கொள்கின்றனர்.






4 years

பத்து வரை உள்ள பொருட்களை எண்ணக்கொடுத்தல்.
மாடிப்படி ஏறும்போது எத்தனை படிகள் ஏறினீர்களென கேட்டல்.
ஒரு அறையிலுள்ள வட்டமான அல்லது சிவப்பான பொருட்களை எண்ணச் சொல்லல்.

பொருட்களின் இலக்க ஒழுங்கு மாற்றப்பட்டாலும் இருக்கக்கூடிய பொருட்களின் எண்ணிக்கை மாறாது மற்றும் வித்தியாசமான பொருட்கள் இருந்தாலும்  அவற்றை ஒரு பொருட் கூட்டமாக எண்ணப்பட முடியும் என்பதனை குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர்.



www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 22nd of February 2020.



Monday 17 February 2020

எவ்வாறு குழந்தைகளுக்கு கணிதத்தை ஒரு மொழியாக கற்றுக் கொடுக்கலாம்?


பெற்றோர்களை பொறுத்த வரையில், குழந்தைகளுக்கு பிறப்பிலிருந்து ஒரு மொழியை கற்றுக் கொடுப்பதில் கொடுக்கும் சிரத்தையை கணிதத்தை கற்றுக் கொடுப்பதில் எடுப்பதில்லை. காரணம் குழந்தை பருவத்தில் அவர்களால் கணிதத்தை கற்க முடியாது என்ற தப்பெண்ணமே. உண்மை அதுவல்ல. ஏனைய மொழிகளை போல கணிதத்தின் மொழியையும் குழந்தைகளால் சிறு வயதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.

எண்களை மற்றும் கணித திறனை குழந்தைகள் ஒரு வயதில் இருந்தே கற்றுக் கொள்ள ஆரம்பிக்கின்றார்கள் என உளவியலாளர்கள் கூறுகின்றார்கள்.



குழந்தைகள் மனிதர்களை அவதானிப்பதன் மூலமும் தொடர்பாடல் கொள்வதன் மூலமும் ஒரு மொழியை கற்றுக்கொள்கின்றார்கள். அதே நேரத்தில் தனது சூழலுடன் தொடர்பு வைப்பதன் மூலம் கணித மொழியை கற்றுக்கொள்கின்றனர். மொழி என்பது ஒருவருடன் தொடர்பாடல் கொள்ள அவசியம். ஆனால் கணிதம் உலகை அறிய அவசியம். 

முன் பள்ளி காலத்தில்   கணித மொழியின் அடிப்படை பற்றிய தன்னம்பிக்கையை குழந்தைகளுக்கு விதைக்கும் போது பிற்காலங்களில்  கணிதம் பற்றிய பயம் உருவாகுவதை குறைக்க முடியும் என ஆராய்ச்சிகள் முன் மொழிகின்றன.



எவ்வாறு குழந்தை ஒரு மொழியாக கணிதத்தை கற்றுக்கொள்கின்றது?


பின்வரும் ஐந்து படிமுறையினூடாக குழந்தை கணிதத்தை கற்றுக் கொள்கின்றது என பிரபல Education consultant Dr Hari Krishna கூறுகின்றார். 

படி 1

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயரை தொடர்பு படுத்துவது போல பொருட்களை இலக்கத்துடன் தொடர்புபடுத்தல். 

படி 2
ஒவ்வொரு இலக்கத்துக்கும் ஒன்று இரண்டு மூன்று என பெயர் இருக்கின்றது அது ஒரு மாறாத தொடர்ச்சியாக உள்ளது.( There is sequence to names)

படி 3
இலக்கமாக பெயர் சூட்டப்பட்ட எண்ணிக்கை பொருட்களின் எண்ணிக்கைக்கு சமானம்.

படி 4
பொருட்களின் இலக்க ஒழுங்கு மாற்றப்பட்டாலும் இருக்கக்கூடிய பொருட்களின் எண்ணிக்கை மாறாது.

படி 5
வித்தியாசமான பொருட்கள் இருந்தாலும் அவற்றை ஒரு பொருட் கூட்டமாக எண்ணப்பட முடியும்.



குழந்தைகளுக்கு கணித மொழியை கற்பிக்கும் போது இந்த 5 படிகளையும் கருத்திற்கொண்டு கற்பிக்க வேண்டும். இதில் ஒரு படியையாவது விட்டுச் செல்வது என்பது கணிதத்தை கற்பதில் குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்படலாம்.


www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 18th of February 2020.

Friday 14 February 2020

குழந்தைகளுக்கு எழுத்துத்திறனை எவ்வாறு மேம்படுத்தலாம்?


ஒரு குழந்தை ஆக்கப்பூர்வமாக எழுத வேண்டும் என்றால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும்  தயாராக வேண்டும்.


உடல் ரீதியாக எழுதுவதற்கு தயாராகுதல் என்றால் என்ன?

ஒரு குழந்தையின் எழுத்து திறன் என்பது ஒரு விடயத்தை சிந்தித்து புரிதலுடன் எழுதுதலாகும்.  முதலில் ஒரு  எழுத்தை அது எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதனை கவனித்தல்  வேண்டும். பின் அது இயக்க தசைகளினூடாக கை  விரல்களினால் எழுதப்படல் வேண்டும். அதேநேரத்தில் அந்த எழுத்துக்கான ஒலி சேர்க்கப்படல் வேண்டும். இவை அனைத்தும் குழந்தைகளுக்கு விருத்தி அடைய குறைந்தது ஏழு வயது வரையாவது காத்திருக்க வேண்டும் என்பது உளவியலாளர்களின் கருத்து.



இவைகள் விருத்தி அடைய முன்னால் குழந்தைகளை எழுதுமாறு வற்புறுத்தும் போது இயக்க தசைகளின் போதிய விருத்தி இன்மையினால் அவர்கள் கை  வலியை  உணர்வார்கள்.

சில குழந்தைகள் சிறு வயதிலேயே பேனை பென்சிலை பிடித்து கிறுக்குவதை அவதானித்து உள்ளோம். இது அந்த குழந்தை எழுதுவதற்கு ஆயத்தமாகியுள்ளது என்று அர்த்தமல்ல. அது பெரியோர்கள் செய்வதை பார்த்து அந்த பொருளுடனான அவர்களது ஆராய்ச்சியுடன் கலந்த விளையாட்டாகும்.

கைகளை பிடித்து குழந்தைகள் எழுத வேண்டும் என்றால் முதலில் அதற்கான விரல் தசைகள் விருத்தியடைய வேண்டும்.

விரல் தசைகள் விருத்தி அடைவதற்காக குழந்தைகளுக்கான அடிப்படை பயிற்சிகள் பின்வருமாறு

மணிக்கட்டு கட்டுப்பாட்டுக்கான பயிற்சி (Wrist Control)


  • கத்தரியினால் வெட்டுதல் 
  • கடதாசியை மற்றும் புடவைகளை  மடித்தல்
  • போத்தலில் தண்ணீர் நிரப்புதல்
விரல் தசை விருத்திற்கான பயிற்சி

  • மணி கோர்க்க விடுதல்
  • பட்டன் போட விடுதல்
  • Shoe lace கட்ட விடுதல்
மூளையின் இரு பகுதிகளையும் நேர் எதிராகவும் ஒரே திசையிலும் தொழிற்பட விடுதல்

  • ஈர துணியை எதிர் எதிராக புளிய விடுதல்.
  • பாயை இரண்டு கையாளும் மடிக்க விடுதல்


குழந்தைகளுக்கு எழுத்துக்களை எவ்வாறு சொல்லிக் கொடுக்கலாம்?

உளவியலாளர்களின் கருத்துப்படி நேரடியாக கொப்பியையும் பேனாவையையும் கொடுத்து குழந்தைகளை எழுத வைப்பது ஆரோக்கியமான விடயமல்ல. மாறாக படிப்படியாக வித்தியாசமான texture யினூடாக எழுத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் போது அது குழந்தைகளின் மனதில் இலகுவாக பதிந்துவிடுகின்றது.

உதாரணமாக கைகளால் அசைத்து காற்றில் எழுத சொல்லிக் கொடுதல் (Air Writing). இதன்போது அதனை பாட்டாகவோ நடனமாகவோ மாற்றி கற்பிக்கும் போது குழந்தைகள் சுவாரஷ்யமாக கற்றுக்கொள்வார்கள். 

அதே நேரத்தில் ஒரு எழுத்தை சொல்லிக்கொடுக்கும் போது இரு பக்க  கால் கை பயன்படுத்தும் போது மூளையின் இரு பகுதிகளையும் பயன்படுத்த வாய்ப்பை வழங்குகின்றோம். உதாரணமாக வலது பக்க கையையும் இடது பக்க காலையையும் பயன்படுத்தல்.

பின்னர் இதனை Water Writing ஆக மாற்றல். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து கைகளால் எழுத்தை எழுத விடுதல்.

பின் மணலில் தண்ணீரை கலந்து அதில் எழுத விடுதல். ஒரு தட்டையை வெயிலில் வைத்து மெதுவான சூட்டில் எழுத விடுதல். துணிகளை அட்டையில் ஒட்டி அதில் எழுத விடுதல்.

இறுதியாக சீமெந்து தரையில் எழுத விட்டதன் பிற்பாடு கடதாசியை கொடுத்து எழுதவிடும் போது குழந்தை நன்றாக எழுத ஆரம்பிக்கும். கடதாசியில்  crayon ஆல் பின் பென்சிலால் எழுத விடுதல்.


இது குழந்தைகளின் கைகளுக்கு வித்தியாசமான உணர்வுகளை வழங்கி எழுத்தை இலகுவாக எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கும்.  

மனரீதியாக குழந்தைகளை எழுதுவதற்கு தயார் படுத்தல் என்றால் என்ன?


  • படிப்பதற்கான அமைதியான சூழலை உருவாக்குதல்.
  • சுவரை பார்த்தப்படி உட்காரவைத்தல்.
  • எழுதும் போது அடிக்கடி பாராட்டுதல்.
  • முழு பக்கத்தையும் ஒரே தடவையில் எழுதவிடாமல் இடை  இடையே இடைவெளி விட்டு மூளைக்கு ஓய்வு கொடுத்தல். இவ் இடைவெளியில் சின்ன சின்ன விளையாட்டுக்களை வழங்கல்.

    www.drsanoosiya.blogspot.com
    By ART OF PARENTING at 14th of February 2020.


Monday 10 February 2020

உங்கள் குழந்தை கதைப்பதற்கு தாமதமாகின்றதா?


குழந்தைகள் பேச வேண்டும் என்றால் பேச்சை கேற்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருத்தல் வேண்டும். பேசுவதற்கான ஊக்குவிப்பு (speech stimulation) இன்மையே இன்றைய அநேகமான குழந்தைகளின் பேச்சு தாமதமாக்குவதற்கு பிரதான காரணமாக உள்ளது.



குழந்தைகளின் பேச்சு விருத்தி
  •  10 மாத குழந்தை  ‘’அம்மா’’ ‘’மம்மா’’ ‘’தட்டா’’ போன்ற அர்த்தமில்லாத சில வார்த்தைகள் பேசும். (babbling).
  • 1 -1/2 வயது குழந்தைகள் கிட்டத்தட்ட 10 வார்த்தைகள் பேசுவார்கள்.
  • நாக்குக்குண்டான தசைகள் விருத்தி அடையும் போதே பேச்சு தெளிவாகும்.
  • குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் போது முதலில் தெளிவின்மை அதாவது மழலை தன்மை இருக்கும்.
  • பொதுவாக பெண் குழந்தைகள் 5 1/2 வயது வரை அவர்களது பேச்சில் தெளிவின்மை இருக்கும். ஆனால் நிறைய விஷயங்களை பேசுவார்கள்.
  • ஆண் குழந்தைகளை பொறுத்த வரையில் வார்த்தைகளை குறைவாக பயன்படுத்துவார்கள். தெளிவாக கோர்வையாக பேசுவதற்கு 7 1/2 வயது வரை கூட தாமதிக்கலாம் என்பது  சில உளவியலாளர்களின்  கருத்து.

குழந்தைகளின் பேச்சுத் திறனை பாதிக்கும் நோயியல் காரணிகள் பின்வருமாறு

  1. கேள்விப் புலன் குறைபாடு
  2. Tongue Tie எனப்படும் நாக்கில் ஏற்படும் இயலாமை
  3. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையாக இருக்கலாம்
  4. Autism  மற்றும் Hyperactivity போன்ற disorder ஆக இருக்கலாம்

ஆனால் இன்றைய நவீன உலகை பொறுத்தவரையில் குழந்தைகளுக்கு பேச்சுக்கான ஊக்குவிப்பு (speech stimulation) குறைந்து செல்வதே பேச்சு தாமதமாக்குவதற்கு  பிரதான காரணமாக உள்ளது  


முன்னைய காலங்களில் வீடுகளில் அதிகமான நபர்கள் கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தார்கள். இதனால் குழந்தைகள் பேச்சை தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தது. இன்று அவ்வாறான சூழல் நமது வீடுகளில் இல்லை.

மற்றும் Gadget பாவனை குழந்தைகள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் இன்றைய காலத்தில் அதிகம் என்பதனால் அதிகம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இடையிலான நேரடி கதை தொடர்பு அருகிச்செல்கின்றது.

கைகளுக்கும்  கண்ணிற்கும்  வார்த்தைக்கும் இருக்கக் கூடிய  தொடர்பு பேச்சு வளர்ச்சியில்  முக்கியமானது. நாம் சொல்லும் விடயத்தை குழந்தை சைகைகளிலே புரிந்து கொண்டால் அவர்களுக்கு பேச வேண்டும் என்ற தேவை வராது. குறைந்த பட்ச செயலினூடாக எமக்கும் குழந்தைகளுக்கும் உள்ள தொடர்பு இருக்குமேயானால் அவர்களுக்கு பேச வேண்டிய அவசியம் வராது.

அதனால்தான் குழந்தைகளுக்கு பேச்சு வரவில்லை என்றால் சந்தைக்கு கூட்டிச்செல்லுங்கள் என்று எமது முன்னோர்கள் கூறியுள்ளனர். காரணம் அங்கு  நிறைய வார்த்தைகளை கேட்பதனால் குழந்தைகள் பேசுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.



குழந்தைகள் பேசுவதற்கான வயதெல்லை தாமதமாகும் போது பெற்றோர்களாகிய நமது பொறுப்பு என்ன?
  • Gadget பாவனையைகுழந்தைகளுக்கு இயன்றளவு குறைத்து நிறைய வார்த்தைகளை கேட்பதற்கான வாய்ப்பை வழங்கல்.

உதாரணமாக கடைகளுக்கு கூட்டிச்செல்லும் போது அது சம்பந்தமாக கதைத்துக் கொண்டு செல்லல். இங்கு குழந்தை உடனே பதில் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வார்த்தைகளை குழந்தை மூளையில் பதிவதற்கான வாய்ப்பை வழங்குவதே முக்கியமானது.
  • ஒருவிடயத்தை குழந்தையுடன் பகிரும் போது அதை ஒரு வார்த்தையுடன் முடித்து விடாமல் அதனை அதனை விளையாட்டு மைதானத்தில் Running commentary வழங்கப்படுவது  போல வழங்குதல் .

உதாரணமாக குழந்தைக்கு தக்காளியை அறிமுகப்படுத்தும் போது  ''அம்மாவை பார், நான் தக்காளி வாங்கி வந்தேன். இது சிவப்பு நிறம். இதை தண்ணீரில் கழுவுவோம். ஓ!! தண்ணீர் சில்லன்று இருக்கின்றது.'' என்றவாறு

மாறாக இது தக்காளி இதை அவ்வாறு சொன்னால் தான் நான் உனக்கு தருவேன் என வார்த்தைகளை சொல்லும் படி வற்புறுத்தும் போது குழந்தை பேசுவதையே நிறுத்திவிடும்.



By ART OF PARENTING at 10th of February 2020.