Tuesday 7 January 2020

குழந்தைகளின் பிழைகளை திருத்துவது எவ்வாறு?


எமது குழந்தைகள் வன்முறைகளும் குழப்பங்களும் மலிந்து கிடக்கும் உலகத்தில் வாழ்ந்து  கொண்டு இருக்கின்றார்கள். இந்த காலகட்டத்தில்  குழந்தைகள் பிழைகளே செய்யக் கூடாது என எதிர்பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். பெற்றோர்களாகிய எமது கடமை குழந்தைகள் பிழைகள் விடும் போது அவர்களை சரியான விதத்தில் வழிகாட்டுவதே.



அதே நேரத்தில் பிழை செய்யும் எல்லா குழந்தைகளையும் ஒரே விதத்தில் அணுக முடியாது. குழந்தைகளின் வயது, முதிர்ச்சி தன்மை, பிழை செய்யும் காலகட்டம் என்பன அவர்களை அணுகும் விதத்தை  தீர்மானிக்கின்றன.

அதனால்தான் குழந்தை உளவியலானது குழந்தைகள் செய்யும் பிழைகளை தப்பு, தவறு, குற்றம் என மூன்று வகையாக வகுக்கின்றது.




தப்பு

ஒரு விஷயத்தை பிரச்சினை படுத்த வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. அதை செய்தால் பிரச்சினை ஏற்படும் என்ற அறிவும் இல்லை.

உதாரணமாக குழந்தைக்கு கண்ணாடி கோப்பை ஒன்றை எடுக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அதனை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஆனால்  அதனை ஒரு கையால் எடுத்தால் உடையும் என்ற அறிவு இல்லை.

இங்கு  குழந்தை, சொல்வதை விளங்கிக்  கொள்ளும் பருவத்தில் இருந்தால் சரியான தகவலை வழங்கலாம். 

''கண்ணாடி கோப்பையை ஒரு கையால் எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுத்தால் அது விழுந்து உடைந்து விடும். அதனை கையில் எடுக்க வேண்டும் என்றால் இரண்டு கைகளால் பிடித்து எடுக்க வேண்டும். அப்போது அது உடையாது.''

related article

 விளங்கிக் கொள்ளும் பருவத்தை அடையாத சிறிய குழந்தையாக இருந்தால் பிள்ளையின் கைக்கு எட்ட முடியாத இடத்தில் கோப்பையை வைத்தல் வேண்டும். அதாவது குழந்தைக்கு எட்டக் கூடாத விடயத்தை அவர்களுக்கு கொடுக்கக் கூடாது. இது Child  proofing எனப்படும்.

தவறு

ஒரு விஷயத்தை பிரச்சினைபடுத்த வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஆனால் அதை செய்தால் பிரச்சினை ஏற்படும் என்ற அறிவு உண்டு.

உதாரணமாக குழந்தைக்கு கண்ணாடி கோப்பை ஒன்றை எடுக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அதனை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஆனால்  அதனை ஒரு கையால் எடுத்தால் உடையும் என்ற அறிவு உண்டு.

இங்கு குழந்தைக்கு மாற்று வழிகளை(choices)  சொல்லி கொடுக்கலாம். 

''ஒரு கையால் பிடிக்க வேண்டும் என்றால் பிளாஸ்டிக் கோப்பையை பயன்படுத்துங்கள். இரண்டு கைகளால் பிடிக்க முடியும் என்றால் கண்ணாடிக் கோப்பையை பயன்படுத்துங்கள்.''

குற்றம்

ஒரு விஷயத்தை பிரச்சினை படுத்த வேண்டும் என்ற எண்ணமும்  உண்டு . அதை செய்தால் பிரச்சினை ஏற்படும் என்ற அறிவும் உண்டு.

உதாரணமாக கண்ணாடி கோப்பையை ஒரு கையால் எடுத்தால் உடையும் என்று தெரியும். அதை உடைப்பதனால்  பெற்றோர்கள் கவலை பட வேண்டும் என்பதற்காக கையில் எடுத்து உடைத்தல்.

இது பெற்றோர்களின் முறையற்ற குழந்தை வளர்ப்பினால் பிறந்ததிலிருந்து உருவாக்கப் படுகின்றது. குழந்தைகள் சொல்வதையோ செய்வதையோ தொடர்ந்து புரிந்து கொள்ளாமல் இருப்பதனாலும் அவர்கள் மீது  அதிகாரத்தையும் வன்முறையையும் திணிப்பதனாலும் பெற்றோர்களை வெண்டுமென்று கஷ்டப்படுத்த அவர்கள் நடந்துகொள்கின்றார்கள்.

இங்கு குழந்தைக்கு தண்டனை வழங்கினாலும் எமது குழந்தை வளர்ப்பிலுள்ள பிரச்சினையை இனங்கண்டு தீர்ப்பதற்கு வழிகளை கண்டறிய வேண்டும்.



ஆகவே குழந்தைகள் பிழை செய்யும்போது அதனை சரியான விதத்தில் அணுகுவதன் மூலம் அவர்களை எதிர் காலத்தில் சிறந்த பிரஜைகளாக உருவாக்குவோமாக!!!!!!!!!

www.drsanoosiya.blogspot.com


By ART OF PARENTING at 7th of January 2020.



No comments:

Post a Comment