Wednesday 22 July 2020

குழந்தைகள் பாடசாலை செல்ல ஏன் மறுக்கின்றனர்?



குழந்தைகளின் பாடசாலை செல்வதற்கான ஆயத்த நிலையில், உடலியல் மற்றும் உளவியல் காரணங்கள் பங்களிப்பு செலுத்துகின்றன என்பது உளவியலாளர்களின் கருத்தாகும்.

குழந்தைகள் பாடசாலை செல்ல மறுப்பதற்கான காரணங்கள்
  
  •  Separation anxiety எனப்படும் பெற்றோரை பிரிந்து இருப்பதற்கான பயம் பிரதான காரணமாக கருதப்படும். வீட்டில் ஒரு குழந்தையாக வளரும் குழந்தைகளிடத்தில் இது அதிகமாக காணப்படும். வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் குழந்தைகளிடத்தில் சிறுவயதிலிருந்து பெற்றோரை பிரிந்து பழகி இருப்பதனால் இதன் தாக்கம் குறைவாக இருக்கும்
  •  குழந்தையின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் குழந்தையுடன் ஆசிரியர் கண்டிப்பாக நடந்து கொள்ளும் போது குழந்தை பாடசாலை செல்ல மறுக்கலாம்.
  • குழந்தைக்கு இரவு தூக்கம் குறைவாக இருத்தல் மற்றும் காலை உணவு சாப்பிடாமல் செல்லல். இதனால் பாடசாலை செயற்பாடுகளில் ஒருமுகப்படுத்த முடியாமையினால் குழந்தை பாடசாலை செல்ல மறுக்கலாம்.
  • நீண்ட தூரம் பாடசாலைக்காக பயணித்தலும் பயத்தை அதிகரிக்கும்.
  • குழந்தைக்கு கற்றல் சம்பந்தமான பிரச்சினைகள் இருந்தல்.
இப்படியான பிரச்சினைகளை எதிர்நோக்கும் சில குழந்தைகள், தான் பாடசாலை செல்ல மாட்டேன் என நேரடியாகச் சொல்வார்கள். இன்னும் சிலர் avoidance behaviors மூலம் அதனை வெளிக்காட்டுவார்கள்.

உதாரணமாக வேண்டுமென்றே இரவில் நேரம் சென்று தூங்கச்சென்று காலையில் நேரம் சென்று எழும்புதல். கை, கால், வயிறு வலிக்குது எனக் கூறல். இன்னும் கடுமையாகும் போது வாந்தி எடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர். குழந்தைக்கு மனப் பயம் அதிகமாக உள்ள போது, குழந்தை உண்மையாகவே இத்தகைய நோய் அறிகுறிகளை உணரலாம்.



பாடசாலை செல்ல மறுக்கும் குழந்தைகளை எவ்வாறு கையாளலாம்?
  • குழந்தையின் அன்றாட பழக்க வழக்கங்களில் மாற்றங்களை கொண்டு வருதல்.


குழந்தைகளுக்கு 10-12 மணித்தியாலங்கள் இரவு தூக்கம் அவசியம் என்பது அநேக உளவியலாளர்களின் கருத்தாகும். இது மன அழுத்தத்திற்கான ஹார்மோன்களின் அளவை மூளையில் குறைத்து காலையில் முணங்கிக் கொண்டு அழுதுக்கொண்டு எழும்புவதை தடுக்கும். மேலும் காலையில் குழந்தை மனப்பயத்துடன் காணப்பட்டாலும் நன்றாக தூங்கி அமைதியாக உள்ள குழந்தையிடம் கலந்துரையாடல் மூலம் அதனை மாற்றி அமைக்கலாம்.

அமைதியான முறையில் காலை உணவை வழங்குதல். 

இதுவும் நேரத்துடன் எழும்பும் குழந்தையிடமே சாத்தியமாகின்றது. அதேவேளை அதிகளவு உணவை ஒரேநேரத்தில் வழங்கும் போதும் குழந்தை அதை உண்பதில் சிரமத்தை எதிர்நோக்கும். உதாரணமாக பாலையும் மற்றைய காலை ஆகாரத்தையும் ஒரேநேரத்தில் வழங்குதலை குறிப்பிடலாம். இதற்கு மாறாக குறைந்த அளவில் சத்துள்ள ஆகாரத்தை வழங்கலாம். 
  •  தினமும் பாடசாலை அனுப்புதல்.

குழந்தை பாடசாலை செல்ல மறுக்கின்றது என்பதற்காக அடிக்கடி விடுமுறை வழங்கும் போது அவர்களிடம் பாடசாலை செல்வதற்கான coping skill விருத்தி அடைய தாமதமடையலாம். எனவே குழந்தை பாடசாலை செல்ல மாட்டேன் என அடம்பிடிக்கும் போது அவர்களை அமைதிபடுத்தி தினமும் அனுப்புதல் அவசியமாகும். பொதுவாக குழந்தைகள் பாடசாலை செல்வதற்கான coping skillயை விருத்தி செய்ய 2-3 மாதங்கள் வரை செல்லலாம். ஆகவே அதுவரை பொறுமையாக இருத்தல் அவசியமாகும்.
  • ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் சிறந்த உறவை பேணுதல்.

பெற்றோர்கள் குழந்தை பாடசாலை செல்ல மறுக்கும் விடயத்தை ஆசிரியரிடம் சுமுகமாக கலந்துரையாடுதல். பாடசாலைகளில் பயிற்சி கொப்பிகளை சேகரித்தல் போன்ற  சின்ன சின்ன பொறுப்புக்களை குழந்தைகளுக்கு  வழங்குதல். இதன் மூலம் நாம் பாடசாலை சென்று ஏதாவது செய்ய முடியும் என்ற உணர்வை ஏற்படுத்துவதோடு பாடசாலை பற்றிய பயத்தை போக்கும்.

கற்றல் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் பிரச்சினைகளை இணங்காணும் போது அவற்றை பெற்றோர்களுடன் கலந்துரையாடுவதுடன் அதற்கான தீர்வை பெற இருபாலாரும் ஒருவருக்கொருவர் உதவுதல்.
  • பிரிவினால் ஏற்படும் பயத்தை குறைத்தல்

''நீங்கள் பாடசாலை சென்று வாருங்கள் நாம் இந்த வேலைகளை செய்வோம்'' என்றவாறு கூறும்போது அவர்களுக்கு பெற்றோர்கள் நாம் பாடசாலை சென்று வரும்போது வீட்டில் இருப்பார்கள் என்ற மனநிலையை ஏற்படுத்தும். இது separation anxietyஆல் ஏற்படும் பயத்தை குழந்தைகளுக்கு இல்லாமலாக்குகின்றது.

மேலும் டசாலை செல்லாவிட்டால் நான் அதிபரிடம் சொல்லுவேன் போன்ற பயமுறுத்தல்களை செய்ய வேண்டாம். இதுவும் குழந்தைக்கு பாடசாலை பற்றிய பயத்தை அதிகரிக்கும்.
  • குழந்தைகளிடம் காணப்படும் மன அழுத்தத்தை போக்குவதற்கு நன்றாக விளையாட அனுமதித்தல்.

www.drsanoosiya.blogspot.com.

2020.07.22







No comments:

Post a Comment